குவஹாத்தி: அஸ்ஸாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த பெண் அவரது கணவரால் தீவைத்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுலுக்கு முத்தமிட்டது தொடர்பாக அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அதில் தனது மனைவி மீது தீவைத்து விட்டார் கணவர். அவரும் தீவைத்துக் கொண்டார்.
இதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்ஸாமின் ஜோர்ஹாட் நகருக்கு ராகுல் வந்திருந்தார். அங்கு மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில பெண்கள் திடீரென ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தனர். அதில் ஒருவர்தான் போன்டி. காங்கிரஸ்வார்டு உறுப்பினரான போன்டி, ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
போன்டியின் செயலால் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். நேற்று அவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார். அதில்ஆத்திரமடைந்த கணவர் திடீரென மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து விட்டார்.பின்னர்தனக்கும் தீவைத்துக் கொண்டார். இதில் இருவரும் கருகினர். அலறித் துடித்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குபோன்டி பரிதாபமாக உயிரிழந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுலுக்கு முத்தமிட்ட பெண்ணை அவரது கணவரே தீவைத்து எரித்துக் கொன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட பெண் ராகுல்காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று அசாம் போலீஸார் மறுத்துள்ளனர். தீயில் கருகி இறந்தது பெண் கவுன்சிலர் போன்டி தான். ஆ னால் அவர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.