துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றிறை தொடர்ந்து விஜய் மற்றும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘கத்தி’.
இதில் விஜய் இரு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். கத்தி திரைப்படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனலுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.
இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ் கரன் என்பவருக்குச் சொந்தமானது என்றும் இந்த படத்தை எடுப்பது தமிழர்களுக்கு எதிரானது என்றும் ஈழத் தமிழர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால், படத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்படும் என்று கருதிய தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதோடு, பத்திரிகைச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதில், “சில பத்திரிகை குறிப்புகளில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் அந்தச் செய்தி தவறானதும், ஆதாரமற்றதும் ஆகும். உலகமெங்கும், குறிப்பாக இலங்கையில் உள்ள தமிழர்களின் நல் வாழ்விற்கு பல நல்ல செயல் திட்டங்களை லைகா நிறுவனத்தின் ஞானம் பவுண்டேஷன் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதை இங்கே தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்,” என்று அந்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே லைகா நிறுவனம் ஏற்கெனவே ஞானம் புரொடெக்சன்ஸ் என்ற பெயரில் இயக்குனர் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் சேரன் நடிக்க.. ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தமிழ்ப் படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார்கள். ராஜபக்சேவுக்கும் லைகா நிறுவனத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று மறுத்தாலும் லைகா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஷ் கரன் ராஜபக்சேவின் நண்பர் என்பதற்கு பல ஆதாரங்களை இணையதளங்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் இதுப்பற்றி நடிகர் விஜய் என்ன சொல்கிறாரோ?