முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 2 பேரிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருச்சி – கல்லணை சாலையில் உள்ள திருவளர்சோலை என்ற இடத்தில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை, கடந்த 2012 ஜூன் 27ம் தேதி, சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ க்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, ஜூலை 24ம் தேதி வழக்கு குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 28ம் தேதி வரை, இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடி க்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமஜெயம் கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் சிலரிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 2 பேரிடம் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சிபிசிஐடி யிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் வசதி இல்லாததால், சிபிஐ அலுவலகத்தில் அந்த சோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.