தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அதிமுகவினர் வைத்த வாழ்த்து பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில், வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக வென்றதாகவும் அதில் கூறப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில் வாக்கு வித்தியாசத்தைத் துல்லியமாக குறிப்பிட்டு எப்படி பேனர் வைத்தனர் அதிமுகவினர் என்பது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் தேர்தலில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை வரும் மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான கே. பரிமளம் சார்பில் காஞ்சிபுரத்தின் பிரதான சாலையான காந்திசாலை வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே 4 பிரமாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதில் அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று அந்த பேனர்களில் வாழ்த்து செய்தி போடப்பட்டிருந்தது. பேனரில் 40 எம்.பி.யையும் பெற்றோம்’ என்ற வாக்கியமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேனர்களால் காஞ்சிபுரத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பான சாலையில் இந்த பேனர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் மற்றும் காஞ்சிபுரம் தாசில்தார் பானுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சர்ச்சைக்குரிய பேனர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை அகற்ற உத்தரவிட்டார். உடனடியாக பேனர்கள் காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.