ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் வெற்றிகரமாக வானில் ஏவப்பட்டது.
ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட் வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இரண்ண்டாவது முறை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான 29 மணி நேர கவுண்டவுன் நேற்று ஆரம்பித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிருந்து 05-01-2014 மாலை சரியாக 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. புகையை கக்கிக் கொண்டு விண்ணை நோக்கி ஜி.எஸ்.எல்.வி டி-5 வெற்றிகரமாக பாய்ந்து சென்றது.
ஜி சாட்-14 செயற்கைக்கோள் – பயன்கள்
- சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 செயற்கைக்கோள், ஏற்கனவே அனுப்பப்பட்ட “எஜூ சாட்” செயற்கைக் கோளுக்கு மாற்றாக செலுத்தப்படுகிறது.
- ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளில் பூமியின் ஒரு பகுதியிலிருந்து அனுப்பப்படும் தகவல்களை நமது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெறுவதற்காக, டிரான்ஸ்பாண்டர்கள் என்னும் 14 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன,
- இவற்றிற்குத் தேவையான 2600 வாட்ஸ் எரிபொருளுக்காக சிறப்பு சூரியத் தகடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்த செயற்கைக் கோளை இந்தியா புவி நிலைப் பாதையில் நிலை நிறுத்துவதன் மூலம் தகவல் தொடர்பில் பல்வேறு வளர்ச்சிகளை எட்ட முடியும்.
- குறிப்பாக, இணையதள வசதி இல்லாத கிராமங்களுக்கு கல்வி தொடர்பான சேவைகளை வழங்கவும், வெளிநாட்டில் உள்ள ஒரு திறன் வாய்ந்த மருத்துவர், கிராமப்பகுதியில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகளுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கவும் கூட இந்த செயற்கைக் கோள் பயன்படும்.