பெங்களூர்:விஜயவாடா டிவிஷனில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூர்-நாகர்கோயில் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தங்களது கட்டண பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு தினமும் மாலை 5 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 17235) இயக்கப்படுகிறது. ஒசூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக இந்த ரயில் நாகர்கோயிலை மறுநாள் காலை சென்றடையும்.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நாகர்கோயிலில் இருந்து பெங்களூருக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (ரயில் எண் 17236) ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில்களில் பயணம் செய்வதற்காக டிக்கெட் எடுத்தவர்கள் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் தங்களது டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெறலாம். இந்தியாவின் எந்த ஒரு டிக்கெட் கவுண்டரிலும் அவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
விஜயவாடா டிவிஷன் வழியாக பெங்களூர் வரும் ரயில்கள் நாகர்கோயில் ரயில் நிறுத்தப்படும் பிளாட்பாரத்துக்குதான் வரும் என்பதால் நெரிசலை தவிர்க்க இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது எனத்தெரிகிறது.