“ஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி” என வட கொரியா பகிரங்கமாக தாக்கி உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் தென் கொரியா தலைநகர் சியோலுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஷியுன் ஹையை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, “அண்டை நாடான வட கொரியா 4 ஆவது அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருகிறது. அது செயற்கை கோளின் புகைப்படங்கள் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, “வட கொரியா இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்படும். மேலும் பல பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என எச்சரித்தார்.
வட கொரியாவுக்கு கடும் எரிச்சல்
இது வட கொரியாவுக்கு கடும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதை பிரபலிக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களையும் ஆபாச வார்த்தைகளால் கடுமையாக தாக்கியுள்ளது.
இதுகுறித்து வட கொரியாவின் சமாதான மறு சீரமைப்பு கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கடந்த சில நாட்களாக தென் கொரிய அதிபர் பார்க் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரின் நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமாக உள்ளது.
தென்கொரிய அதிபர் பார்க் அறிவு வளர்ச்சியற்ற ஒரு பெண். அவரின் செயல் தனக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை ஏவிவிட்டு தாக்கும்படி கெஞ்சுவது போன்று உள்ளது.
ஒபாமா ஒரு புரோக்கர்:
மேலும், ஒரு புத்திசாலித்தனமான விபசாரி, ஒருவரை அழிக்க பலமிக்க புரோக்கர் ஒருவரிடம் தனது உடலை விற்பது போன்று கருத வேண்டியுள்ளது.
அவர்கள் இருவரும் வேறு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதை சகித்து கொள்ள முடியாது. ஒபாமாவும், பார்க்கும் எங்கள் மீதான மிரட்டல் மற்றும் பிளாக் மெயிலை நிறுத்தி கொள்ள வேண்டும். அவர்களின் முட்டாள்தனமான மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.