பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், “முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, “நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்” என செய்யாத சாதனைக்காக தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்ற பழமொழியை விட விரைவாக இரண்டு நாட்களிலேயே தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது.
ஜூன் மாதத்தின் முதல் இரு நாட்கள் மட்டும் மின்வெட்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூன் 3-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. சென்னை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் 4 முதல் 6 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.