வில்லங்கச் சான்றிதழ் கட்டணமின்றி ஆன்லைனில் பார்க்கும் வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
பதிவுத் துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை பொதுமக்கள் கட்டணமின்றி அத்துறையின் இணையதளத்தில் பார்க்கும் வசதியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். பதிவுத் துறை மூலம் ரூ.9.2 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:
பல இடங்களில் பதிவுத்துறை அலுவலகங்கள் வாடகை கட்டிடங் களில் இயங்கி வருகின்றன. சொந்தக் கட்டிடங்களில் இயங்கி வரும் அலுவலகங்களிலும் பதிவு ஆவணங்களைப் பராமரிக்க, பணியாளர்கள் திறம்பட பணியாற்ற போதிய இட வசதி இல்லை. பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டும் சிறிய இடங்களுக்கு அதிக அளவில் வாடகை தர வேண்டிய நிலையை தவிர்க்கவும், பதிவுத் துறையில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் 5 ஆண்டு காலத்துக்குள் சொந்த கட்டிடங்களைக் கட்ட முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சேலம் மாவட்டம் – வீரபாண்டி, ஓமலூர், ஜலகண்டா புரம்; திருப்பூர் மாவட்டம் கணியூர், உடுமலைப்பேட்டை; தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கொம்மடிக்கோட்டை; விருதுநகர் மாவட்டம் சேத்தூர், திருத்தங்கல்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – தாத்தையங்கார்பேட்டை; பெரம்ப லூர் மாவட்டம் – வேப்பந்தட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் – திருப்பூண்டி; கரூர் மாவட்டம் – நங்கவரம்; நாமக்கல் மாவட்டம் – பரமத்தி வேலூர், குமாரபாளையம்; திருவண்ணா மலை மாவட்டம் – வெம்பாக்கம்; திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்; விழுப்புரம் மாவட்டம் – வடக்கனந்தல் ஆகிய 18 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ரூ.9.2 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
அந்த சார் பதிவாளர் அலு வலகக் கட்டிடங்களில், அலுவலர் களுக்கான அறைகளுடன் கணினி அறை, பதிவுருக்கள் பாதுகாப்பு அறை, காத்திருப்போர் அறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன் படுத்துவதற்கான சாய்தள மேடை, அகலமான நடைபாதை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பதிவுத்துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமுமின்றி இணையதளத்தில் பார்வையிடும் வகையில் ரூ.58 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள வசதியையும் தொடங்கி வைத்தார்.
www.tnreginet.net என்ற இணையதள முகவரியில் இந்த வசதியைப் பெறலாம்.