சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் சுமார் ரூ.14,500 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதையடுத்து கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. 2–வது நாளாக சோதனை ரெயில் ஓட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரெயில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரெயில் செயல் இயக்குனர் நரசிம்ம பிரசாத், தலைமை திட்ட மேலாளர் அர்ஜூன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் இயக்கப்பட இருக்கும் மெட்ரோ ரெயில் சிறப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ரெயில் மற்ற மாநிலங்களில் ஓடக்கூடிய மெட்ரோ ரெயில்களை விட பல்வேறு சிறப்புகளை பெற்றது.
சென்ட்ரல்– எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இது விடப்படுகிறது.
மொத்தம் 42 மெட்ரோ ரெயில்கள் சென்னையில் உலா வர இருக்கின்றன. இதில் 9 ரெயில்கள் பிரேசில் இருந்தும், மற்ற ரெயில்கள் ஆந்திராவில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த ரெயில்கள் அனைத்தும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும்.
ஒரு மெட்ரோ ரெயிலில் சுமார் 1260 பேர் பயணம் செய்ய முடியும் 176 இருக்கைகள் உள்ளன. 1100 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம். இந்த ரெயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக 16 இடங்களில் கண்காணிப்பு கேமிரா இருக்கும். அவசர வசதிகளும், ஊனமுற்றோர், மற்றும் வயதானவர்கள் பயணம் செய்ய வீல் சேர்களும் இடம்பெற்று உள்ளன.
கடந்து சென்ற ரெயில் நிலையம், வரஇருக்கும் நிலையங்கள் உள்பட பல்வேறு விவரங்களை அறியும் வகையில் எல்.இ.டி. திரை ரெயிலில் இருக்கும். இது தவிர ரெயில் நிலையங்களை குறிப்பிடும் வரைப்படமும் பயணிகள் பார்வைக்காக இருக்கும். பயணிகளின் அவசர உதவிக்கு ரெயில் டிரைவரை அழைக்கும் வகையில் பட்டன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதை அழுத்தி அவரிடம் தகவல் தெரிவிக்கலாம்.
மெட்ரோ ரெயிலில் சிறப்பு வகுப்பு, சாதாரண வகுப்பு என 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டி முழுவதும் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் வெளியே பார்ப்பதற்கு வசதியாக இருபுறமும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரெயில் பெட்டி முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டத்தின் போது வழிநெடுக வீடுகளில் உள்ள மக்கள் மாடியில் நின்று கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறும். கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை ஜூன் மாதத்தில் இயக்கப்படும் என்று தெரிகிறது.