ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களது விடுதலை குறித்து மாநிலஅரசு முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.
தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறை சட்டம் 432–ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 3 பேரை உடனே விடுதலை செய்யக் கூடாது. இதில் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வரும் வரை 3 பேரையும் விடுவிக்கக் கூடாது. தற்போதைய நிலையே இதில் நீடிக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் தண்டனையை குறைத்து சலுகை காட்டும் விஷயத்தில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை.
எனவே எந்த அடிப் படையில் 3 பேரை விடுதலை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு 2 வாரத்துக்குள் பதில் அளித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுபோல மூன்று ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளும் இது தொடர்பாக விளக்கம் அளித்து பதில் தர வேண் டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.