தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் வைத்திருப்பதில் பெரும் குடைச்சலில் இருக்கிறது கர்நாடக அரசு. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகம் விரும்புகிறது.
செப்.27ல் ரூ.66.65 கோடி வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக பெங்களூர் சென்ற ஜெயலலிதா, நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அங்கேயே சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவர் அடைக்கப்பட்ட மத்திய சிறைச்சாலை வளாகத்திலும், சிறைச்சாலையைச் சுற்றிலும் அதிமுக தொண்டர்கள் பெருமளவில் நாள்தோறும் குவிந்து வருகின்றனர். கடந்த நில நாட்களாக அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் நீதிமன்றமும் மாநில அரசும் திணறிவருகிறது. இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதால், மாநில ரிசர்வ் போலீஸ் படைகொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு வருகிறது.
தமிழக அமைச்சர்கள், அதிமுக மூத்த தலைவர்கள் என பெங்களூருவுக்குச் சென்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஏதோ நெருக்கடி காரணமாக, அவர்களைச் சந்திப்பதை ஜெயலலிதா தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், கர்நாடக மாநில ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
“இது மிகவும் உணர்ச்சிகரமான விவகாரம். சென்ற வாரம் தமிழக வழக்குரைஞர்கள், அதிமுக தொண்டர்கள் பல இடங்களில் கர்நாடக அரசுக்கு எதிராக இங்கே பல போராட்டங்களை நடத்தினர். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணையில் தாமதம் ஏற்படுத்துவதாக எங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அவருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதில் இருந்து நாங்கள் தேவையற்ற பிரச்னைகளை இதுவரை சந்திக்காத வகையில் இப்போது சந்தித்து வருகிறோம். எங்கள் மாநிலத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா தமிழக சிறைக்கு மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக அவருக்கு சிறை நிர்வாகம் மருத்துவ வசதிகளை அளித்து வருகிறது. ஜெயலலிதா விருப்பப் படி, முதலில் ஓரிரு நாட்கள் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்கியபோதும், சிறை நிர்வாக விதிகளைக் காரணம் காட்டி அது மறுக்கப் பட்டுள்ளது. இதுவும் கர்நாடக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிறை நிர்வாகத்தின் செயல்கள் தங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அந்த அமைச்சர், “ஜெயலலிதாவுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வழங்குவதற்கு விமர்சனம் எழுவதால், அதற்காக நாங்கள் அவருக்கு சிறை உணவையே வழங்க வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறினால், அதனால் எழும் அரசியல் ரீதியான நெருக்கடியை நாங்கள் சந்தித்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே காவிரி நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கர்நாடக அரசின் மீது அதிருப்தியில் உள்ளது தமிழகம். இந்நிலையில் மேலும் இரு மாநிலங்களுக்கு இடையில் பிரச்னைகள் புதிதாக உருவாவதை கர்நாடகம் விரும்பவில்லை என்கிறார் அந்த அமைச்சர்.
வரும் அக்.7ம் தேதி ஜெயலலிதா சார்பிலான ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் நீதிமன்ற நடைமுறைகளை மாநில அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜாமீன் மீதான நீதிமன்ற உத்தரவில் ஏதேனும் விபரீதமான முடிவு எழுந்தால், நிச்சயமாக மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றச் சொல்லி கேட்டுக் கொள்ளும் என்று தெரிகிறது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அதிமுக தொண்டர்களுக்கும், தமிழர்களுக்கும் விடுத்த வேண்டுகோளில், அமைதி காக்குமாறும், வன்முறையைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். தாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மட்டுமே பின்பற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.