தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இலங்கை செல்வதாக அறிவித்துள்ளார்.
ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் தங்கச்சிமடம் சமுதாயக்கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மீனவப் பிரநிதிகள் சேசு, பேட்ரிக், சந்தியா, ராயப்பன், அருள், ஜெயசீலன் உள்ளிட்டோர்முன்னிலை வகித்தனர்.
இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசியதாவது,
”பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று ஐந்து மாதங்களில் மட்டும் 82 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களினால் விடுதலைசெய்யப்பட்டு தாயகம் திரும்பினாலும் 82 விசைப் படகுகளை இலங்கை அரசுவிடுவிக்க மறுத்து விட்டது.
தற்போது யாழ்பாணம் சிறையில் 24 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குக்கு அளித்த பேட்டியில், ” நான் இலங்கை சென்றிருந்தபோது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள், தொழிலாளர்கள் அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்துவிடுங்கள். ஆனால், அவர்களுக்கு விசைப் படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள், என்றார்.
சுப்ரமணியன் சுவாமியின் கருத்து தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களின பாரம்பரிய உரிமை மற்றும் வாழ்வாதத்திற்கும் எதிரானது.
பாம்பனில் ஜனவரி மாதம் நடைபெற்ற பாஜக நடத்திய கடல் தாமரைப் போராட்டத்தின் போது பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ” மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும்” என வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீனவர்களின் நலனிற்காக, மீன்வளத் துறைக்கு தனி ஆணையம் அமைப்பதற்கு கூட சாத்தியக்கூறு இல்லை, என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும் பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட குஜராத் மாநில மீனவர்களை விடுதலை செய்தும், பாகிஸ்தான் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 56 விசைப்படகுகளை மீட்டுக் கொடுத்துள்ளார்.
எனவே பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக மீனவர் குறித்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
மேலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற அடிப்படையில் தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக அடுத்த வாரம் இலங்கை செல்லவுள்ளேன், என்றார்.