இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான ஆட்சியமைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை இந்த வார இறுதியில் மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மே மாதம், 7 பெண்கள் அடங்கலாக 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஆறுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்றனர்.
குறிப்பாக, அமைச்சர் அருண் ஜெட்லி முக்கிய இரண்டு பொறுப்புக்களான பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை வகிக்கின்றார்.
நரேந்திர மோடி மேலும் 10 புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாஜக ஆட்சியிலுள்ள கோவா மாநிலத்தின் முதலமைச்சர் மனோகர் பரிகார் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
கடந்த 30 ஆண்டுகாலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றமை குறிப்பிடத்தக்கது.