தமிழகத்தில் திருட்டு சி.டி. விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லாவிடம் நடிகர் சங்கத் தலைவர் ஆர். சரத்குமார் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.
அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
திருட்டு சி.டி. விற்பவர்கள் மீது கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக அப்போது திருட்டு சி.டி. விற்பனை வெகுவாகக் குறைந்திருந்தது.
ஆனால், இப்போது திருட்டு சி.டி. விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ் திரையுலகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே காவல் துறை, திருட்டு சி.டி. விற்போரை மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சி.டி. கடைகளிலும், திருட்டு வி.சி.டி விற்கப்படுகிறது. எனவே அனைத்து சி.டி. கடைகளிலும் போலீஸார் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, மாநிலத்தில் முக்கிய நகரங்களில் இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் புதிய திரைப்படம் வெளியான ஒரு சில நாள்களிலேயே, அந்த திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சேனல்களின் உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.