புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 39 நாட்களாக என்எல்சி தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நெய்வேலியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தி 24% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் போன்றட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி.யில் பணியாற்றும் 12,000 நிரந்தர தொழிலாளர்களும், 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் கடந்த 39 நாட்களாக என்எல்சி நிரந்தர தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக என்எல்சி நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனையடுத்து தொழிலாளர்கள், உண்ணாவிரதம், மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர்.
இந்நிலையில், நெய்வேலியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.