நமக்கு நாமே விடியல் மீட்பு பிரசாரத்தின் 2ம் நாள் பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கினார்.
சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, “நமக்கு நாமே விடியல் மீட்பு” என்ற பெயரில் தமிழகம் முழுவதும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நமக்கு நாமே” பயணத்தைத் தொடங்கிய நான் இன்று கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு, அங்குள்ள கடைகாரர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் கலந்துரையாடினேன். பிறகு காமராஜர் மணி மண்டபம் மற்றும் காந்தி மணிமண்டபம் சென்று மரியாதை செலுத்தி விட்டு, பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தேன். 1000த்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன். செல்கின்ற இடத்தில் எல்லாம் மக்கள் அளிக்கும் பேராதரவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இந்த ஆதரவை எல்லாம் பார்க்கும் போது, அதிமுக ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.,
என்று கூறியுள்ளார்.