விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக்கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பேராசிரியையை ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் நிர்மலாதேவி. இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை பல்கலைக்கழக பெயரைக் கூறி பாலியலுக்கு வற்புறுத்திய ஆடியோ அண்மையில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திலும் மாணவிகள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, அக்கல்லூரியின் செயலர் ராமசாமி நேற்று அளித்த பேட்டி:
‘‘பாலியல் வற்புறுத்தல் குறித்து கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர். இதுகுறித்து 3 மூத்த பேராசிரியர்களைக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கூறினேன். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். அதன்பின் பேராசிரியை நிர்மலாதேவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டு குறித்து அவர் பதில் அளித்தபின் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அதன்பின் சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடரும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் நலன் கண்டிப்பாக பாதுகாக்கப்படும்’’ என்றார்.