ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் இலங்கை அணி மோதுகிறது. கான் சாகேப் ஆஸ்மான் அலி ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், வங்கதேசத்தில் இன்று தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. ‘ரவுண்ட் ராபின்’ லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. இந்த சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மார்ச் 8ம் தேதி இறுதிப் போட்டியில் மோத உள்ளன.
இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி இலங்கையுடன் மோதுகிறது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து இலங்கை (பிப். 28), பாகிஸ்தான் (மார்ச் 2), ஆப்கானிஸ்தான் (மார்ச் 5) அணிகளுடன் மோதுகிறது. காயம் காரணமாக டோனி விலகியுள்ளார். இந்நிலையில், இந்திய அணி இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. எல்லா போட்டிகளும் பகல்/இரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன.