உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றா விட்டால், அந்நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இத்தாலி, கனடா ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகள் ஜி8 என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தன. இந்த அமைப்பின் மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெறவிருந்தது. ஆனால், உக்ரைன் நாட்டில் பிரிவினைவாத தீவிரவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதால் அந்த நாட்டை நீக்கி விட்டு, மற்ற நாடுகள் சேர்ந்து ஜி7 அமைப்பை ஏற்படுத்தின. இந்த அமைப்பின் மாநாடு, பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் நகரில் கடந்த 2 நாளாக நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்டோர் பங்கேற்று, ரஷ்யாவின் செயல்பாடு குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தின் முடிவில், ஒபாமாவும், கேமரூனும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,
உக்ரைன் தேர்தலில் வென்ற புதிய தலைவர் பெட்ரோ போரோசென்கோவை ரஷ்யா அங்கீகரிக்க வேண்டும். அதே போல், உக்ரைன் எல்லையில் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ரஷ்யா நிறுத்த வேண்டும். உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளை ரஷ்ய அதிபர் புடினுக்கு விதிக்கிறோம். இவற்றை அவர் ஒரு மாதத்திற்குள் ஏற்காவிட்டால், ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.