முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1991 -ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா, மற்றும் சசிகலா மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நடைபெறும் இவ்வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து 20 சாட்சிகளின் விசாரணையை தொடங்க வேண்டும் என்று வருமான வரித்துறையின் வழக்கறிஞர் ராமசாமி வாதாடினார்.
ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் வாதாடினார். சமரசமாக இவ்வழக்கை தீர்க்க வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா மனு கொடுத்திருப்பதாகவும் அந்த மனு மீது விரைவாக முடிவு எடுக்கும் படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதாடினார். அவ்வாறு உத்தர விட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வருமான வரித்துறை வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தட்சணா மூர்த்தி அக்டோபர் 1-ம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அன்றைய தினம் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு இருவரும் பதில் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி நீதிமன்றத்தில் இருந்து ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், இனிமேல் விலக்கு அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.