தற்போது நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில், சுமார் 3 ,300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளனர் என்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் பவானிசிங் கூறினார்.
முன்பு முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா, சொத்துக் குவித்ததாக தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஒரு வார காலமாக பெங்களூரூ சிறப்பு கோர்ட் நீதிபதி குன்ஹா முன்னிலையில் நடந்து வருகிறது.
அரசு வக்கீல் பவானிசிங், ஜெயலலிதாவுக்கு சார்பாக நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் உள்ளது. மறுபுறம், அதே அரசு வக்கீல்தான் தனது இறுதி வாதத்தின்போது, ஜெயலலிதாவும், அவரது சகாக்களும் சுமார் 3 ,300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளனர் என கூறியுள்ளார்.
அரசு வக்கீல் தனது இறுதி வாதத்தின்போது,“சசிகலா, இளவரசி மற்றும் அவர்கள் நடத்திய நிறுவனங்கள் சசி என்டர்பிரைசஸ், ரெவரே அக்ரோபார்ம், ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜெயா டி.வி., பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளனர்.
முதலில் இவர்களது சொந்த பெயர்களில் வாங்கப்பட்ட பல சொத்துக்கள், பின்னர் இந்த நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதும் நடந்துள்ளது.
சொத்துக்கள் பட்டியல்:
1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர்,
2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா.
3. நீலாங்கரை 2 ஏக்கர்.
4. கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். ( இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும். இதுவே 4 ஆயிரம் கோடியை தாண்டுகிறது இது ஒரு உத்தேச மதிப்புதான் ).
5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.
6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர்.
7. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
8. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்
9. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம்.