பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இலக்கு வைக்கப்பட்டதோ என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய எதிரிகள் இருப்பது ஒன்றும் ரகசியமானது அல்ல. அண்மையில்தான் பிரிக்ஸ் மாநாடு முடிந்தது.
அம்மாநாட்டின் மூலம் சர்வதேச புவிசார் அரசியலில் உலக பொருளாதாரத்தில் கோலோச்சுகிற நாடுகளுக்கு சவால்விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டினால் ஓஐசியானது அதிருப்தியுடன் இருக்கிறது. (இரண்டு ஓஐசி அமைப்புகள் உள்ளன. 1) 56 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு. 2) இஸ்லாமிய கலாசார பாதுகாப்பு அமைப்பு. இந்த இரண்டில் எதுவென சுவாமி தெளிவாக குறிப்பிடவில்லை) எதிரி சக்திகளுடன் உள்நாட்டு தேசவிரோத சக்திகள் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கின்றன.
உக்ரைன் நமக்கு நட்பு நாடாக இருந்தாலும் சதிவேலை நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இது குறித்து நமது பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி விமானத்தில் இறங்கி வருவது போலவும் அதன் அருகே ஏவுகணைகள் இருக்கும் படத்தையும் போட்டு ‘CONSIPRACY?” என்ற தலைப்பில் ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில், மலேசிய விமானம் பயணித்த அதே பாதையில் மோடியின் விமானம் 55 நிமிடங்கள் மட்டுமே பின்னால் வந்துள்ளது.” என்றும் குறிப்பிட்டும் இருக்கிறார்.