மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் பெப்பர் என்ற புதிய ரோபோவை ஜப்பானின் சாப்ட் பேங்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தையான ஜப்பானில், செயற்கை நுண்ணறிவு அமைப்பும், உணர்ச்சிகளை அறியும் ஒரு புதிய தொழில்நுட்பமும் இந்த புதிய ரோபோவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரோபோவினால் ஒருவரின் சைகைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரல் தொனிகள் போன்றவற்றை அறிந்துகொள்ள இயலும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தொடர்பு கொள்வதுபோல் இந்த ரோபோக்களிடமும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்றும், அது பல்வேறு பணிகளையும் செய்யும் திறமை கொண்டது என்றும் சாப்ட்பேங்க் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 1,98,000 யென் விலை கொண்ட இந்த ரோபோ அடுத்த வருடம் பொதுமக்கள் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மசயோஷி சோன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் இருப்பவர்களை இதயமற்ற ரோபோக்கள் என்று மக்கள் குறிப்பிடுவதுண்டு.
ஆனால் முதன்முறையாக உணர்ச்சிகளையும், இதயத்தையும் கொண்ட ரோபோ தங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி