160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரிட்டனின் ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
“இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது” என்று ஹார்ப்பர் கூறியிருக்கிறார்.
1845ஆம் வருடத்தில் கனடா நாட்டை ஒட்டியுள்ள ஆர்ட்டிக் பிரதேசத்தில் அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்கக்கூடிய “நார்த் வெஸ்ட் பாஸேஜ்” எனப்படும் பாதையை கண்டறிவதற்காக சர் ஜான் ஃப்ராங்க்ளின் என்பவர், 129 பேருடன் இரண்டு கப்பல்களில் புறப்பட்டார்.
ஆனால், விரைவிலேயே இந்த இரண்டு கப்பல்களும் காணமல் போயின. விக்டோரியா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக்கான கடல் பயணங்களிலேயே தீராத சில மர்மங்களில் ஒன்றாக இந்தக் கப்பல் விவகாரமும் நீடித்துவந்தது.
2008ஆம் ஆண்டில் ஃப்ராங்க்ளின் கப்பல்களைத் தேடும் பணியை கனடா அரசு துவங்கியது. ஆர்டிக் பிரதேசத்தில் பனி உருக ஆரம்பித்ததால், அந்தப் பகுதியில் கப்பல்கள் செல்வது சாத்தியமாகியிருக்கும் நிலையில், நார்த்வெஸ்ட் பாஸேஜ் மீது தனக்கு இறையாண்மை இருக்கிறது என்பதை உறுதிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டது.
கிங் வில்லியம் தீவுக்கு அருகில் விக்டோரியா நீரிணையில் தேடல் குழுவினரால் எதிரொலிமானி மூலம் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் படங்கள், கடலடியில் கப்பலின் பாகங்கள் இருப்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளன.
கனடாவின் மாபெரும் மர்மம்
“ஃப்ராங்க்ளின் ஆய்வுப் பயணத்தில் சென்ற இரண்டு கப்பல்களில் ஒன்று கண்டறியப்பட்டிருப்பதன் மூலம், கனடாவின் மாபெரும் மர்மங்களில் ஒன்று தீர்க்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ஸ்டீஃபன் ஹார்ப்பர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
“ஒரு கப்பலைக் கண்டுபிடித்திருப்பது, இன்னொரு கப்பலைக் கண்டுபிடிப்பதற்கும், ஃப்ராங்க்ளின் தேடல் குழுவுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கும் தேவையான ஊக்கத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
100 வருடங்களுக்கு முன்பாக, பண்டைய எகிப்திய மன்னனான துதன்காமுனின் சமாதி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு, மிகப் பெரிய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிபிப்பு இதுதான் என பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளரான வில்லியம் பாட்டர்ஸ்பை குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் குழுவினருக்கு என்ன ஆனது என்பது கண்டுபிடிக்கப்படாததால், பல ஆண்டுகளாக இந்த மர்மம் நீடித்துவந்தது.
கிங் வில்லியம் தீவுக்கு அருகில் இந்தக் கப்பல்கள் பனிக்கட்டிக்குள் சிக்கியிருந்திருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். அதனால், தாங்களாவது பாதுகாப்பாக தப்பிக்கலாம் என்ற நோக்கில், கப்பலில் இருந்தவர்கள் கப்பல்களைக் கைவிட்டுவிட்டு வெளியேறியிருக்கலாம்.
அப்படித் தப்பியவர்கள், மரணமடைவதற்கு முன்பாக, உணவு கிடைக்காமல் மனிதர்களையும் தின்றனர் என அப்பகுதியில் வசிக்கும் இன்னூயிட்டுகள் கூறியதாக சில தகவல்களும் உண்டு.
சர் ஜான் ஃப்ராங்க்ளினின் மனைவி, தன் கணவரைத் தேடுவதற்காக ஐந்து கப்பல்களை அனுப்பிவைத்தார். அவர்கள் தப்பியிருந்தால் உணவுக்கு ஆகும் என உணவுக் கேன்களும் பனிக்கட்டிகளில் வைக்கப்பட்டன.
மொத்தமாக 50 முறை இப்படித் தேடல்கள் நடத்தப்பட்டன.
கப்பல் குழுவினர் எப்படி இறந்தனர்?
இதற்கு நூறாண்டுகளுக்குப் பிறகு 1980களில் மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ஆய்வுசெய்தபோது, அந்த உடல்களில் அதிக அளவில் காரீயம் இருந்தது தெரியவந்தது. அவர்களது உணவு கேன்கள் சரியாக மூடப்படாததால், உணவில் காரீயம் கலந்து 129 பேரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது.
ஆனால், சமீப கால ஆய்வுகள், ஃப்ராங்க்ளின் குழுவினருக்கு வழங்கப்பட்ட உணவுக் கேன்களில் பிரச்சனையில்லை என்றும் கப்பலின் உள் குழாய்களிலிருந்தே காரீயம் உணவில் கலந்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
ஃப்ராங்கிளினின் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடல் அகழாய்வில் மிக எதிர்பார்க்கப்பட்ட, முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
2008ஆம் ஆண்டிலிருந்து கனடாவைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் இந்தக் கப்பலைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.