சென்னையில் அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளது. இங்கு கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆனால் புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு அதனை ஏழை–எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார்.
உயர் சிகிச்சை பெறமுடியாமல் உயிர் இழக்கும் ஏழை மக்களுக்கு நவீன மருத்துவ கருவிகளுடன் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கட்டிடம் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டது. மருத்துவமனைக்கேற்ற வகையில் உள்கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது நிறைவடைந்தன. பொதுப்பணித்துறை மூலம் ரூ.26.92 கோடியில் பணிகள் நடைபெற்றன.
சர்வதேச தரத்திற்கு இணையாக இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தற்போது உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தரை தளம் மற்றும் 6 அடுக்கு மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் தரை தளத்தில் புறநோயாளிகள் பிரிவும், முதல் தளத்தில் நவீன, உபகரணங்களுடன் கூடிய பரிசோதனை கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தளத்தில் நிர்வாக அலுவலகமும், 3 மற்றும் 4–ம் தளத்தில் பொது வார்டும் 5 மற்றும் 6–வது தளத்தில் ஸ்பெஷல் வார்டுகளும் ஆபரேஷன் தியேட்டர்களும், இடம்பெறுகின்றன.
நவீன தொழில்நுட்பம் அடங்கிய எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி.ஸ்கேன் கருவிகள், கலர் டாப்லர் எக்ஸ்ரே கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ன. நோயாளிகள் துணிகள், போர்வை, படுக்கை விரிப்பு போன்றவற்றை சலவை செய்யும் வசதியும், அதனை இஸ்திரி செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேர குடிநீர் மற்றும் மின்சார வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் எற்கனவே 200 கழிவறைகள் இருந்தன. தற்போது நோயாளிகள் பயன்படுத்த வசதியாக தனித்தனியாக 300 கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சிகிச்சை முறையில் கிருமி தாக்காத வகையில் ‘ஸ்டெர்லைஸ்டு’ செய்யும் வசதியும் இங்கு உள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத மருத்துவ சேவையை வழங்கக்கூடிய வகையில் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைந்துள்ளது. பிரபல தனியார் மருத்துவமனைகளை மிஞ்சக்கூடிய வகையில் இது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது. பல்வேறு மருத்துவ துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மருத்துவ நிபுணர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நர்சுகளும் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு வருகிறார்கள். மருத்துவம் சாராத ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் நோயாளிகள் இங்கு அனுமதிக்க பரிந்துரைக்கப்படலாம்.
இங்கு உயர் சிகிச்சை பெறுவதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இங்கு சிகிச்சைபெற சில கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் வகுக்கப்படுகின்றன. ஆஸ்பத்திரியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள புதிய விதிமுறைகள் பின்பற்றக்கூடும் என்று தெரிகிறது.
ஆஸ்பத்திரி வளாகத்தில் அழகிய புல் தரைகளும், மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. புதிய மருத்துவமனைக்குள் சென்றால் ஆஸ்பத்திரிக்குள் இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாது. அந்த அளவிற்கு ரம்மியமாக, அமைதியான சூழல் நிலவுகிறது.