சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Chennai: AIADMK supporters protest outside Subramanian Swamy’s Residence #Jayaverdict pic.twitter.com/BtswiWQJrW
— ANI (@ANI_news) September 27, 2014
பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறை வெடித்துள்ளது.
சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மதுரையில் கல்வீச்சு – கடையடைப்பு – பஸ் போக்குவரத்து பாதிப்பு
மதுரையில் பல இடங்களில் கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்துள்ளன. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
புதுச்சேரி, கர்நாடக, கேரளப் பேருந்துகள் நிறுத்தம்
புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு வரும் வோல்வோ பேருந்துகளை ரத்து செய்துள்ளது. மேலும் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வழியாக வரும் பேருந்துகளும், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
திமுக பிரமுகர்கள் வீடுகள் மீது தாக்குதல்
தமிழகம் முழுக்க திமுக பிரமுகர்களின் வீடுகள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, அறிவாலயம், மு.க.ஸ்டாலின் வீடுகளில் கல்வீச்சு நடந்துள்ளது. தென் சென்னை திமுக மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு குளறுபடி
வன்முறை நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போலீஸார் உரிய முறையில் உஷார் நிலையில் வைக்கப்படவில்லை. இதனால் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.