அமெரிக்காவில் இரட்டையர் இருவர் 24 நாட்கள் தள்ளி ஒருவருக்கொருவர் பிறந்த சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்த டா சில்வா என்ற 35 வயது பெண் தாய்மை அடைந்திருந்தார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளருவதை “ஸ்கேன்” மூலம் உறுதி செய்த டாக்டர்கள், ஜுன் மாதம் 18 ஆம் தேதியை பிரசவ தேதியாக குறித்து தந்திருந்தனர்.
டாக்டர்களின் எதிர்பார்ப்பையும் மீறி, கருவுற்ற 24 ஆவது வாரமான மார்ச் மாதத்திலேயே டா சில்வாவின் பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பதறிப்போன அவரது கணவர், பாஸ்டனில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார்.
கருவின் நிறைவான வளர்ச்சிப் பருவம் 10 மாதங்கள் என்ற இயற்கை நியதிக்கு மாறான வகையில் 6 மாதத்திற்குள் ஒரு குழந்தை பிறந்தால் அது உயிர் பிழைப்பது கடினம் என்பதை அறிந்திருந்த டாக்டர்கள், டா சில்வாவின் மகப்பேற்றை தள்ளிப்போட அதீத முயற்சி எடுத்தனர்.
ஆனால், டாக்டர்களின் முயற்சிகளுக்கெல்லாம் “டாட்டா” காட்டி விட்டு, இந்த உலகத்துக்கு “ஹாய்” சொல்ல 745 கிராம் எடை கொண்ட முதல் ஆண் குழந்தையை நான்கே நாட்களுக்குள் பிரசவித்தார், டா சில்வா.
அடுத்து பிறக்க வேண்டிய குழந்தையை எந்நேரமும் எதிர்பார்த்த டாக்டர்கள், அது இயற்கையாக பிறக்கும் போதே பிறக்கட்டும். தாயின் கருவறையில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் குழந்தையின் ஆயுளை உறுதிபடுத்தும் மிக முக்கியமான தருணம் என்பதை உணர்ந்திருந்தனர்.
அதற்குள், முதலில் பிறந்த மகனை பார்த்த டா சில்வா, அது ஒரு உள்ளங்கைக்குள் அடங்கி விடும் அளவில் இருந்ததை கண்டு வேதனை அடைந்தார்.
அலெக்ஸாண்ட்ரே என பெயரிடப்பட்ட அந்த குழந்தையை “இன்க்குபேட்டர்” உதவியுடன் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கவனித்து வந்த வேளையில், அடுத்த குழந்தை இன்னும் ஒரு மணி நேரத்தில்.. இரண்டு மணி நேரத்தில்.., ஒரு நாளில்.., இரண்டு நாளில்.., ஒரு வாரத்தில் பிறந்து விடும் என்று நாள் குறித்து வந்த நிலையில், முதல் குழந்தையின் பிரசவத்துக்காக விரிவடைந்திருந்த தாயின் முதுகெலும்பு மீண்டும் குறுகிப்போனதை அறிந்த டாக்டர்கள் கவலை கொண்டனர்.
மார்ச் விடைபெற்று ஏப்ரல் மாதம் ஆகி, அலெக்ஸாண்ட்ரே பிறந்த 24 நாட்கள் கழித்து, கடுமையான சிரமத்துக்குப் பின் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தை மட்டும் சுமார் 3 பவுண்டு எடையுடன் இருப்பதை கண்டு டா சில்வா ஆனந்தம் அடைந்தார். ஆனாலும், கண்ணில் சிறு கோளாறு மற்றும் ஹெர்னியா பாதிப்புடன் சுமார் முக்கால் கிலோ எடையில் பிறந்துள்ள முதல் குழந்தையைப் பற்றி அவரால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.