மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான்: கருணாநிதி

மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே, அதை நான் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இன்று காலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் :-தி.மு.கழகப் பொருளாளர் ஸ்டாலின் நேற்றைய தினம் டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமண வரவேற்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்து பேசியிருக்கிறாரே; இந்தச் சந்திப்பு புதிய கூட்டணிக்கு தொடக்கமாக இருக்குமா?

பதில் :- தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

செய்தியாளர் :- மேலும் பல கட்சித் தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் வீட்டுத் திருமணத்திற்கு வருகிறார்கள். நீங்களும் அங்கு செல்கிறீர்கள். இதைத் தொடர்ந்து புதிய கூட்டணி உருவானால் நீங்கள் வரவேற்பீர்களா?

பதில்:- புதிய அணி உருவானால் அந்த அணி பற்றி தி.மு.க. செயற்குழு – பொதுக்குழு கூடி முடிவெடுத்தால் மகிழ்ச்சியுடன் அதை வரவேற்பேன்.

செய்தியாளர் :- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார். உங்களைச் சந்திக்க வந்தால் சந்திப்பீர்களா?
பதில் :- நாங்கள் நீண்டகால நண்பர்கள்; பகைவர்கள் அல்ல, சந்திப்போம்.

செய்தியாளர் :- இந்த திருமண விழாவை புதிய கூட்டணிக்கு அச்சாரமாக பார்க்கிறீர்களா, ஏனென்றால் டாக்டர் ராமதாஸ் பேசும்போது உங்களுக்கும் அவருக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் சிறந்த நட்பைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறாரே, அதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில் :- மகிழ்ச்சி அடைகிறேன்.

செய்தியாளர் :- தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால், இது மிகவும் முன்கூட்டியே நடைபெறுகின்ற ஒன்றா?

பதில் :- நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி.

செய்தியாளர் :- உங்களைப் பொறுத்தவரை என்ன கருதுகிறீர்கள்?

பதில் – எனக்கு மகிழ்ச்சிதான்.

என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பா.ம.க. தலைவரின் முன்னிலையில் மு.க.ஸ்டாலின், வைகோ சந்தித்துப் பேசிக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாகக் கூடும் என்ற யூகங்களை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “வைகோவுடன் நடந்த சந்திப்பு நட்பு ரீதியானது” என்றார். “இதனை புதிய கூட்டணிக்கான சந்திப்பாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உங்கள் விருப்பம் அதுதான் என்றால், அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.

“கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சியே” என்று ஸ்டாலின் கூறியது பற்றி வைகோவின் கருத்தை கேட்ட போது, “ஸ்டாலின் அவ்வாறு விரும்பினால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.

இந்நிலையில், வைகோ, ஸ்டாலின் கருத்துகளை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் மதிமுக – திமுக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே என திமுக தலைவர் கருணாநிதியும் தெரிவித்துள்ளார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published.