மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெ.ஜெயலலிதா

இது தொடர்பாக தமிழக  முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று  தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள்  படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியை  அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்,  தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன்  அவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான்  உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேஜர் மனைவிக்கு கடிதம்

மேலும் மேஜர் முகுந்த் அவர்களின் மனைவி இந்து அவர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில்,

தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தங்கள் கணவர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனையும், பேரதிர்ச்சியும் அடைந்தேன். இது, உங்களது வாழ்விலேயே மிகவும் துக்ககரமான, மோசமான நாள் என்பதை நன்கு அறிவேன். அன்புமிக்க கணவரை இழந்து நீங்களும், பாசமிகு தந்தையை இழந்து உங்கள் மகளும், போற்றி வளர்த்த அன்பு மகனை இழந்து அவரது பெற்றோரும் தவித்து வருகிறீர்கள்.

எனினும், தாய்நாட்டைக் காக்கும் பெரும் பணியை செய்து வரும் இந்திய ராணுவத்தின் தரப்பில் போரிட்டு பெரும் தியாகத்தை அவர் செய்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். சிறந்த வீரத்திருமகனை தமிழகம் இழந்திருக்கிறது. துணிவுமிக்க ஒரு போர்வீரரை நாடு இழந்துள்ளது.

அவரது மறைவுக்கு தமிழக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை உங்கள் அனைவருக்கும் தருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களது கணவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Check Also

முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *