ராஜீவ் காந்தி கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை மாநில அரசு  விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமனா அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். 25-ம் தேதி ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவு விபரம்:

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடை தொடரும்.

குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுப்பதற்க்காக அரசியல் சாசன அமர்வுக்கு 7 கேள்விகளை உச்ச நீதிமன்றம் தயார் செய்துள்ளது. மேலும், தூக்கு ரத்து செய்யப்பட்டு ஆயுளாக குறைக்கப்படும் பட்சத்தில் அந்த கைதிக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்க அதிகாரம் இருக்கிறதா என்பதையும் அரசியல் சாசன அமர்வே முடிவு செய்யும், இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு மனு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.முருகன் உள்ளிட்ட மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு, குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்தது.

இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி:

மகன் பேரறிவாளன் விடுதலை தள்ளிப் போனதால் அவரது தாயார் அற்புதம்மாள் அதிர்ச்சி தெரிவித்தார். ராஜிவ் கொலை வழக்கை 5 பேர் அமர்வு விசாரிக்கும் என்ற தீர்ப்பை கேட்டு அற்புதம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். பேரறிவாளன் விடுதலையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் உருக்கமுடன் தெரிவித்தார். தனது மகன் நிரபராதி என்பதை நிரூபிக்க தொடர்ந்து போராட போவதாக அவர் உறுதிபட தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பேரறிவாளன் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்திருந்ததாக விசாரணை அதிகாரி கூறியிருந்ததை சுட்டிகாட்டினார். அவரின் தகவல் தமக்கு கூடுதல் ஊக்கம் தந்ததாகவும் குறிப்பிட்டார். பேரறிவாளன் நிரபராதி என்ற நிலையிலும் தற்போதைய தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும் அற்புதம்மாள் கண்ணீர் விட்டது குறிப்பிடத்தக்கது.

Check Also

சுறு சுறு ஓட்டு சேகரிப்பில் திமுக தொண்டர்கள்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கழக தலைவர் தளபதி திரு. மு.கஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *