ஹேர் ஸ்டைலை பார்த்தா தெரியல டீசண்ட்டா ஆளுன்னு – சினிமா ஸ்டைல் திருடன்

சென்னையில் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்று மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்கிற நிலையில்அதனை விழுங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் முயற்சியால் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அந்த தங்கச் சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது.

சென்னை புனித தாமஸ் மவுண்டை சேர்ந்த தனலட்சுமி, தனது உடல்நலம் பாதிக்கப் பட்ட தந்தையை கவனித்துக் கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் தங்கி இருந்தார். வார்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த தனலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி ‘‘திருடன்” “திருடன்”, என்று கூச்சலிட்டார். தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு மர்ம ஆசாமியை பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.

ஆனால், அதற்குள் தான் துரத்தப் படுவதை உணர்ந்த திருடன்  மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்கிற நிலையில் சினிமா ஸ்டைலில் திருடிய செயினை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். செயின் பறிப்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு மருத்துவமனை போலீசார் திருடனைக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட நபர் சென்னை திருவல்லிக்கேணி  பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. திருடிச் சென்ற செயின் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்த கமலக்கண்ணனை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது எக்ஸ்ரேயில் கமலக்கண்ணனின் வயிற்றில் தங்கச் சங்கிலி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கமலக்கண்ணன் வயிற்றில் உள்ள தங்க சங்கிலியை வெளியே கொண்டு வருவதற்கான சிகிச்சை அளிக்கவும், முடியாதபட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் கமலக்கண்ணனுக்கு ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் மூலம் வயிற்றில் இருந்த தங்கச் சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. மேலும் போலீஸார் தெரிவிக்கையில் கமலக்கண்ணன் மீது ஏற்கனவே பல கொள்ளை, திருட்டு சம்பவங்கள் இருக்கின்றன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருந்த கமலக்கண்ணன் சமீபத்தில் தான் விடுதலையாகி இருந்தான். வெளியே வந்தவுடன் மீண்டும் கைவரிசை காட்ட முயன்றபோது, கையும், களவுமாக மாட்டிக்கொண்டான்” எனத் தெரிவித்தனர்.

Check Also

ஷாப்பிங் வித் ரவுடி! 6 டெல்லி போலீஸ் பணியிடை நீக்கம்

ரவுடி மனோஜ் பக்கர்வாலாவை டெல்லி போலீசார் கடந்த 27ம் தேதி திகார் சிறையில் இருந்து ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *