சமீபத்தில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ரமணா‘ படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார்.
அதன்பின் வந்த ‘கஜினி‘ போன்ற படங்கள் வியாபார ரீதியில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றாலும், அவருடைய ‘துப்பாக்கி‘இளைஞர்களுக்கு நல்ல உரமாக விளங்கியது. பல பத்திரிகைகளின் பாராட்டுகளும், பத்திரிகையாளர்களின் பாராட்டுக்களும் பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்போது ‘கத்தி‘ பல சம்பவங்களையும், செய்திகளையும் கடந்து வெளியாகியுள்ளது. ‘கத்தி‘ பட தயாரிப்பாளர் பிரச்சனை. உறையிலிருந்து வெளிவந்த ‘கத்தி‘ பல உயிர்களை பலியாக்கிவிட்டு, மீண்டும் உறைக்குள் திரும்பி அமைதியாகி விடுவதைப்போல ‘கத்தி‘பட விவகாரம் ஆகிவிட்டது.
‘கத்தி‘ படத்தைப் பற்றி கொளித்திப் போட்ட வெடிகள் அனைத்தும் ‘புஷ்வானம்‘ ஆகிப்போனது. சில வெடிகள் பண மழையால் நனைந்து வெடிக்காமல் போனது.
தமிழ் அமைப்புகள் நிலைப்பாடுகள், தங்களை தமிழ் உணர்வாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு வன்முறையில் இறங்கி வியாபாரம் செய்தவர்கள் நிலையைப் பற்றியெல்லாம் நாம் பிறகு பேசுவோம். முதலில் விவசாயிகளின் பிரச்னையை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கும் நண்பர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு பாராட்டுக்கள்.
மக்கள் போராளியாக வாழ்ந்து மறைந்த தோழர்.ஜீவானந்தத்தின் பெயரை தனது முக்கிய கதாபாத்திரத்திற்கு வைத்த ஏ.ஆர்.முருகதாஸூக்கு கூடுதல் பாராட்டுக்கள்.
‘ரமணா‘ படத்தின் மூலம் நண்பர் என்று நினைக்கத் தூண்டிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ‘தோழர்‘ என்று அழைக்கத் தூண்டுகிறது.
ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோ விஜய். அப்படிப்பட்ட கதாநாயகனை வைத்து தன்னுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தி, எந்த சமுதாய அக்கறையும் இல்லாமல் வாழும் சினிமா ரசிகர்களையும், திருப்திப்படுத்தி வெற்றி கண்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதற்கிடையில் படம் வெளிவர உறுதுணையாக இருந்தவர்களில் பத்திரிகையாளர்களும் உண்டு. ரஷ்யாவின் தந்தை என்று அழைக்கப்படும் லெனின் திரைப்படங்களின் ஆளுமையை உணர்ந்து ஒரு அபிப்ராயத்தை சொன்னார்.
”சினிமா” என்பது ஒரு ஊசி (CINEMA IS AN INJECTION). வியாதியை குணப்படுத்தும் ஊசியாகவும் பயன்படுத்தலாம். அதே சமயத்தில் உயிரைக் கொல்லும் விஷ ஊசியாகவும் பயன்படுத்தலாம். அது அந்தந்த மருத்துவர்களைப் பொருத்து. அதாவது திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் இயக்குநர்களைப் பொருத்தது.
இதைப்போலவே கத்தியின் பயன்பாட்டைப் பற்றி ஒப்பிட்டு தந்தைப் பெரியார் சொல்லியுள்ளார். (கத்தியை திருடன் பயன்படுத்துவதும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் பயன்படுத்துவதும்) ‘திருவிளையாடல்‘ படத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் எழுதிய ஒரு வசனம் நாகேஷ் அவர்களால் பேசப்பட்டது.
“பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்”என்பதே அது. அதுபோல் நண்பர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘கத்தி‘ படத்தில் சில குறிப்பிட்ட காட்சியில் பத்திரிகையாளர்களின் நிலையைப்பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் ஒரு உணர்வுள்ள பத்திரிகையாளன் என்கிற முறையில் என்னுடைய வருத்தத்தையும், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் எங்களுடைய கண்டனத்தையும் அன்புடன் தெரிவிக்க விரும்புகிறோம்.
சராசரி மனிதனைவிட, வித்தியாசமான சிந்தனையுடையவர்களே கலைஞர்களாக வருவது போல், சமூக மாற்றத்திற்காக தன்னுடைய எழுத்துக்களால் ஏதாவது ஒரு துரும்பாவது நிகழ்ந்து விடாதா என்று நினைப்பவர்களே எழுத்தாளர்களாகவும்,பத்திரிகையாளர்களாகவும் இத்துறைக்கு வருகின்றனர்.
சமூக விரோதிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் நடுவே சிக்கித் தவித்து, எங்கள் உணர்வுகளைப் போராடி பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.
பெரும்பாலான ஊடங்களும், செய்திகளும், கட்சிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் சொந்தமாகிவிட்ட வேலையில் கஷ்டங்களும், கொள்கைகளும் மட்டுமே எங்களுக்கு தோளோடு தோளாக விளங்கி வருகிறது.
தினம், தினம் எத்தனையோ அவலங்கள் எங்கள் காதுகளுக்கும், சிலது கண்களுக்கும் கூட அறியப்படுகிறது. எங்களின் உயிரைப்பற்றிக் கூட கவலைப்படாமல் அதை செய்தியாக்கி அனுப்புவோம்.ஆனால், அதை வெளியிடுவது முதலாளிகள் கையில்தான் உள்ளது. (எங்களுக்கு எதிராக திருப்பப்படுவதும் உண்டு) நல்ல கதைக்களத்திற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லாமல் போவதுபோல…
ஏ.ஆர்.முருகதாஸ் மிகப் பெரிய கடலை கண்டு வியக்க வேண்டும். ஏதோ ஒரு மூலையில் வந்து கலக்கும் கூவத்தை கண்டு வருந்தக்கூடாது. யார், யாருக்கோ ஆதரவான படம். யார், யாருக்கோ எதிரான படம் என்பதெல்லாம் போய், சில காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான படமாக எண்ணத் தோன்றுவதாக சிலர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கதைக்கு அவசியமாகவே இருந்தாலும், படத்தின் இறுதி தீர்ப்பிற்கு ஊடகங்களின் பங்களிப்பே காரணமாக விளங்குவதாக உருவாக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில பத்திரிகையாளர்களின் இச்செயல்களைக் கொண்டு, அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘மக்கள் தொலைக்காட்சி’, ‘ புதிய தலைமுறை’ போன்ற பல ஊடகங்கள் அதேபோல் பல பத்திரிகைகள் விவசாயிகளின் பிரச்சனைகளை தொடர்ந்து காண்பித்து வருகிறது.
ஆனால், யாருமே உதவ முன் வருவது இல்லை என்று சொல்லும் கருத்து ஏற்புடையது அல்ல. நல்ல கருத்துக்களையும், சமூக மாற்றத்திற்கான இது போன்ற படங்களை தொடர்ந்து இயக்கி வரும், நண்பர் ஏ.ஆர்.முருகதாஸ் எங்களின் உணர்வையும் மதித்து இனி எடுக்கும் படங்களில் செயல்பட வேண்டுகிறோம். அதே சமயத்தில் எங்களுடைய கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி இரண்டு வகை. ஒரு வகை எல்லோரையும் கொன்று குவித்து வெற்றிப் பெறுவது. மற்றொன்று, எல்லோரையும் கூட்டிக்கொண்டு போய் வெற்றிப் பெறுவது. அப்படிப்பட்ட வெற்றியைத்தான் நாம் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியும்.
‘கத்தி‘ பட வெற்றியை உங்களோடு சேர்ந்து எங்களை கொண்டாட முடியாமல் செய்துவிட்டீர்கள். இருப்பினும் ‘கத்தி‘ படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.