இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று படேல் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) குஜராத்தில் திடீரென 10 லட்சத்துக்கும் மேற்பட்ட படேல் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்று (புதன்கிழமை) நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸார் தடியடி நடத்தி கும்பலை கலைக்க முயற்சித்தனர். மேலும் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் (22) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன. கடைகள், அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொது சொத்துக்கள் சேதம் அடைந்தன.
இதற்கிடையில் செவ்வாய்க் கிழமை நடந்த வன்முறையில் 6 பேர் பலியாயினர். இதில், 5 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த கலவரத்தில் மேலும் 3 பேர் இறந்தனர். கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவம், கலவர தடுப்பு படையுடன் கூடுதலாக மாநில ரிசர்வ் போலீஸ் படையும் குவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் 2-வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. தனியார் அலுவலகங்கள், வங்கிகள் இயங்கவில்லை. மொபைல் இணையசேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் ரயில் தண்டவாளத்தை தகர்த்து சேதப்படுத்தியதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஹர்திக் படேல் கூறும்போது, ‘‘போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டதாக போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அரசியல் பின்புலத்தால் எங்கள் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் முயற்சிக்கின்றனர். வரும் காலங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’’ என்றார்.