கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஐடிஐ நகரை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜ்குமார் (30). இவர் என்எல்சி முதலாவது விரிவாக்க சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
நேற்று மீண்டும் வேலைக்கு செல்வது தொடர்பாக தனது நண்பருடன் பேச என்எல்சி சுரங்க பகுதியில் தொலைபேசி அமைந்துள்ள என்எல்சி 2வது சுரங்க நுழைவு வாயிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் நோமன் என்பவர், அவரை தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென ராஜ்குமாரை பாதுகாப்பு படை வீரர் நோமன் அநியாயமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ராஜ்குமார் தலையில் 3 குண்டுகள் பாய்ந்தன.
இதனால், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்தார். இந்த சம்பவத்தால் நெய்வேலியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனை செய்தி சேகரிக்கச் சென்ற கேப்டன் டிவி நிருபர் திரு சீனிவாசலு என்பவரை அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CISF) கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் விருத்தாச்சலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய கேமரா மற்றும் மைக்கும் உடைக்கப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது பற்றி டியுஜே வின் மாநிலத்தலவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
வரம்பு மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட நிருபர் சீனிவாசலு அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்களும் இது போன்ற சம்பவங்களில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகொள் விடுத்தார்.