“கோட்டைக்குச் சுற்றுலா செல்கிறார், கொடநாட்டில் ஆட்சி நடத்த செல்கிறார்” முதல்வர் ஜெயலலிதா – முக. ஸ்டாலின்

தி.மு.கழக இணைய நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது “கோட்டைக்குச் சுற்றுலா செல்கிறார், கொடநாட்டில் ஆட்சி நடத்த செல்கிறார்” முதல்வர் ஜெயலலிதா என்று முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் காட்டிய வழியில் இந்த 92 வயதிலும் சற்றும் தளராமல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் அதிவேகத்தோடு பணியாற்ற வைக்கும் தலைவர் கலைஞர் அவர்களையும் நமது கழகத்தையும் இணையவெளியில் தினம் தினம் காத்து நிற்க்கும் எனதருமை இணைய நண்பர்களே வணக்கம்.

ஜின்னா அவர்கள் பேசியபோது நான் உங்களுக்கு அறிவுரை வழங்க வந்திருப்பதாக சொன்னார். கழக தோழர்கள் பலரும் ஆர்வமிகுதியிலும் என்மீது கொண்ட அன்பின் காரனமாகவும் கட்டளையிடுங்கள், ஆணையிடுங்கள் என்று சொல்கின்ற நேரத்தில் கட்டளையிடவோ, ஆனையிடவோ வரவில்லை. உங்களோடு இருந்த உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றவே விரும்புகிறேன் என்று சொல்வேன் அதுபோலவே இப்போதும் உங்களுக்கு அறிவுரை கூற நான் வரவில்லை, உங்களில் ஒருவனாகவே நான் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளேன். உங்கள் ஒவ்வொருவரின் உற்சாகம் எனக்கு ஊக்கமளிக்கிறது. நாற்பதுக்கு நாற்பதும் வெற்றிப் பெறுவோம் என்கிற நம்பிக்கையைப் பெற்றுத் தருகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழக இணைய தோழர்கள் இந்த நிகழ்விற்கு வர தங்கள் பெயரைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுக்கு பிறகு தேர்தலின் வெற்றி விழாவில் இணையத்தில் பணியாற்றுகின்ற எல்லோரும் பங்கேற்கின்ற வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் தலைவர் கலைஞர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என நான் உறுதியளிக்கின்றேன்.

இந்த நுற்றாண்டில் அறிவியலால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் கொடைதான் இணையம் என்பதை யாரும் மறுத்திட முடியாது.

நீதிக் கட்சி தலைவர்கள் முதல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வரை இயற்கை நமக்களித்த கொடையை எப்படி நாம் கண்டு கேட்டு உண்டுயிர்ந்து உற்றறிந்து பயன் பெற்றோமோ, இன்றளவும் அனுபவித்து வருகிறோமோ அதே போல் இந்த இணையதளத்தையும் நாம் முழுவதுமாக கைப்பற்றி கழகத்தின் மீது பரப்பப்படுகின்ற பொய் பிரச்சாரங்களை மழுங்கடித்திடும் பணியில் உங்களை நீங்கள் முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
தலைவர் வழியில் நீங்களும் கூட்டணி கட்சியை சார்ந்த இணைய தோழர்களிடமும் கழகத்தைப் பற்றி உண்மையான அக்கறையோடு விவாதிப்பவர்களிடத்தில் சாஃப்ட்வேராகவும், (Software) கழகத்தின் மீது அவதூறு பரப்பிடும் மற்றவரிடத்தில் ஹாரட்வேராகவும் (Hardware) அதே நேரத்தில் கண்ணியத்துடன் பதில் சொல்கின்ற பணியை முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்.

தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், கனடா, ஜெர்மனி, ஜோர்டான் மற்றும் இன்னும் ஏராளமான நாடுகளில் இருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் இணையத்தில் பங்காற்றிக் கொண்டிருக்கும் தி.மு.க.வினரை நான் தினமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

கடமையை சரிவர ஆற்றிகொண்டிருக்கும் அதே நேரத்தில் கண்ணியத்தையும் கட்டுப்பாடுகளையும் மீறிவிடாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் என்று உங்களுக்கெல்லாம் நியாபகப்படுத்திட விரும்புகிறேன்.
2010ஆம் ஆண்டு நம்முடைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தலைவர் கலைஞரின் பெருமுயற்சியால் கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக உலக தமிழ் இணைய மாநாடும் நடத்தப்பட்டது.
அம்மாநாட்டில் இணையத்தில் தமிழ் முன்னேற்றம், இணையத் தமிழ், மின்சாதனங்களில் தமிழ் மொழி (செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள்) உள்பட பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

இணையதளம் சம்மந்தப்பட்ட பல தலைப்புகளில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பன்னாட்டு கணினி நிறுவனங்களின் தமிழ் பணிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் பேசினார்கள்.

அந்த ஆய்வரங்கத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியின்போது தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது “”தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் தமிழறிஞர்கள் ஆணையிட்டுச் சொன்னால் தமிழக அரசு செய்யக் கடமைப்பட்டிருக்கிறது”” என்று சொன்னார். அதுதான் தலைவர் கலைஞரின் தமிழ் பற்று.
குடிநீரை விற்று காசு பார்ப்பவர்களுக்கு எங்கிருந்து இந்த தமிழ் பற்று பற்றியெல்லாம் தெரியப் போகிறது. அவர்கள் “”வெறும் வெற்று”” என்பதையும் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த இணைய மாநாட்டின் தொடர்ச்சியாக தலைவர் கலைஞரின் அன்றைய தி.மு.கழக அரசு, Tab, Tam எழுத்துரு குழப்பங்களுக்குத் தீர்வாக, யூனிகோட் எழுத்துருவை அரசு அங்கீகாரம் பெற்ற ஒரே பயன்பாட்டுக் குறியீடாக அறிவித்தது.

சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் விருது போன்ற அறிவிப்புகளை செய்து கணினித் தமிழ் வளர்ச்சியிலும் தன்னுடைய சாதனைச் சக்கரத்தை வெற்றிகரமாக ஓட்டிக் காட்டினார் தலைவர் கலைஞர்.

ஆனால் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை என்ன தெரியுமா?
“”கோட்டைக்குச் சுற்றுலா செல்கிறார், கொடநாட்டில் ஆட்சி நடத்த செல்கிறார்”” இதுதான் ஜெயலலிதாவின் சாதனை.

ஆக, தமிழின் தமிழகத்தின் எல்லா வளர்ச்சிகளுக்கும் எப்படி நம்முடைய திராவிட முன்னேற்ற கழக அரசு அகரமாக திகழ்கிறதோ அதே போல கம்ப்யூட்டரில் தமிழ் வளர்ந்ததற்க்கும் நம்முடைய தலைவரும் தி.மு.கழகமும் தான் காரணம் என்பதை அவதூறு பரப்புபவர்கள் மிக சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள்.

அவற்றை தலைவரின் பாணியில் நீங்கள்தான் ஆதரங்களோடு பதிவு செய்திட வேண்டும். அது உங்களின் தலையாயக் கடமைகளுள் ஒன்று.
இது தேர்தல் நேரம், நமக்கு மிகவும் அவசியமான தேர்தல் இது.நம் இந்திய தேசத்தின் வருங்கால பிரதமரை நிர்ணயிக்கப்போகும் தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களுக்கு உங்கள் விரல்களின் மூலம் வலு சேர்க்க வேண்டியது, திராவிட காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

எலிப்பொறி பயன்படுத்தி எலிகளை பிடிக்கும் லாவகத்தை கண்டுபிடித்தது மனித இனம். எப்படி தன்னை தொந்தரவுகளிலிருந்து தற்காத்து கொண்டிருக்கிறதோ அதே போல் கணிப்பொறி பயன்படுத்தி தகுந்த பதிவுகள் இட்டு தமிழ்நாட்டில் ஜெயலலிதா செய்து கொண்டிருக்கும் சும்மா ஆட்சியை பற்றி மக்களிடத்தில் எடுத்துச் சொல்லிட வேண்டும். வெற்றி சின்னமாம் பேரறிஞர் பெருந்தகை கண்ட உதயசூரியனுக்கும் தலைவர் கலைஞர் அவர்களால் அரவணைக்கப்பட்டிருக்கும் தோழமை கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்குகளை கேட்டு நீங்கள் கணினி யுத்தம் நடத்துங்கள் நாங்கள் களயுத்தம் நடத்துகிறோம். மீண்டும் தேர்தல் வெற்றி விழாவில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் சந்திப்போம்.

Check Also

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்

தமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *