இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் பாஜகவில் நேற்று வெள்ளிக்கிழமை இணைந்தார். அதற்காக பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங்கிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ‘எனக்கு வருத்தமாக உள்ளது. எனினும் அவர்களை கட்டுப்படுத்த எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்கள்’ என்று அவர் பதிலளித்தார்.
மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாஜக தலைவர் நரேந்திர மோடி முன்னிலையில் அம்ரித்ஷர் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக கட்சியில் இணைந்துகொண்டார்.
இந்தியாவில் ‘மோடி அலை’ என்று எதுவும் இல்லை என்று மன்மோகன் சிங் தெரிவித்த மறுநாளே அவரது தம்பி முறை உறவினர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தல்ஜீத் சிங் கோலியை கட்சிக்குள் வரவேற்ற பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தல்ஜீத் சிங் கோலியின் வருகை பாஜகவிற்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் பேசிய பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நடத்தப்படும் விதத்தால் தல்ஜீத் சிங் கோலி வருத்தம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரும் இது தொடர்பில் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.