சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் இன்று போலீஸ் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நிலை ஏற்பட யார் காரணம் தெரியுமா…
தற்போது கேரள மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியில் இருக்கிறார் ஆப்ரகாம். சஹாராவின் ராய்க்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவர்தான் முழுக் காரணமும் ஆவார்.
கேரளாவை சார்ந்த ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கே.எம். ஆப்ரகாம்தான். செபியைச் சேர்ந்த அதிகாரியான ஆப்ரகாம் போட்ட கிடுக்குப் பிடியால்தான் இன்று ராய் போலீஸிடம் சிக்கியுள்ளார். தனி மனிதராக இவர் எடுத்த அதிரடி மற்றும் அயராத நடவடிக்கைகள் காரணமாகத்தான் இன்று சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டுள்ளார்.
செபி இயக்குநர்… செபி அமைப்பில் 2011ம் ஆண்டு ஜூலை மாதம் வரை முழு நேர இயக்குநராக இருந்தவர் ஆப்ரகாம். ஆனால் அதற்குப் பின்னர் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இவர் நேர்மையானவர் என்பதால் அரசியல் ரீதியாக ஏற்பட்ட நெருக்குதல்களே காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஆப்ரகாம் விடவில்லை. சஹராவின் மோசடிகளை முழுமையாக கண்டுபிடித்து தோண்டித் துருவி எடுத்து அத்தனயையும் வெளிப்படுத்தி சஹாராவை நிலைகுலைய வைத்து விட்டது ஆப்ரகாமின் வேலைகள். செபியாலோ அல்லது உச்சநீதிமன்றத்தாலோ கூட இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் ஆச்சரியம். அந்த அளவுக்கு அக்கு வேறு ஆணி வேறாக சஹாராவின் மோசடிகளை ஆப்ரகாம் கொண்டு வந்து விட்டார்.
சஹாராவின் இரண்டு மோசடியான நிழல் நிறுவனங்களை இவர்தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அதில் உள்ள தவறுகளை, மோசடிகளையும் வெளிக் கொணர்ந்தார்.
இவர் தான் காரணம்… சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுஸிங் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ஆகியவை தொடர்பாக இவர் 2011ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி போட்ட உத்தரவுதான் இன்று ராய் சிறைக்குப் போகக் காரணம்.சஹாரா நிறுவனம் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட முதலீட்டுப் பணத்தை இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மாற்றி முதலீடு செய்துள்ளனர்.
அதுகுறித்து ஆப்ரகாமுக்கு வந்து சந்தேகமடைந்து அதை ஆய்வு செய்தபோதுதான் சஹாராவின் மோசடி தெரிய வந்ததாம். இதையடுத்து இனிமேல் நீங்கள் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெறக் கூடாது, நிதி வசூலிக்கக் கூடாது என்று இரு நிறுவனங்களுக்கும் முதலில் செபி உத்தரவிட்டது. ஆனால் அதை சஹரா கண்டுகொள்ளவில்லை. மாறாக கோர்ட்டை நாடி செபிக்கே சிக்கலை ஏற்படுத்த முனைந்தது.
செபி சார்பில் லக்னோ உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த கோர்ட், செபி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து செபி, உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்சநீதிமன்றமும் சஹாராவுக்கு சாதகமாகவே தீர்ப்பு அளித்தது. மேலும் சஹாரா தொடர்பான வழக்கை விரைவாக விசாரிக்க லக்னோ உயர்நீதிமன்றக் கிளைக்கு அது உத்தரவிட்டது.
மறுபக்கம் சஹாரா ஒவ்வொரு கோர்ட் கொடுத்த உத்தரவையும் வாங்கி வைத்துக் கொண்டதே தவிர செபிக்கு அது ஒத்துழைப்பு தரவில்லை. கோர்ட் உத்தரவையும் அது முழுமையாக மதிக்கவில்லை. கடைசியில் அதற்கு எதிராகவே அதன் செயல் திரும்பி உச்சநீதிமன்றத்தால் சுப்ரதா ராய்க்கு எதிரான உத்தரவு வரக் காரணமாக அமைந்து விட்டது. சட்டம், நீதி, செபி என எதையுமே மதிக்கும் வகையில் ராய் மற்றும் அவரது நிறுவனங்கள் நடந்து கொள்ளவில்லை. மாறாக கோர்ட்டுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தார் ராய். கடைசியில் அவருக்கே எதிராகவே திரும்பி விட்டது.