சானல் 4 தொலைக்காட்சியின் புதிய வீடியோ – இலங்கை இராணுவத்தின் அட்டூழியம்

”இலங்கைப் போரில் அருவருக்கத்தக்க மீறல்களுக்கான புதிய வீடியோ ஆதாரம்” என்னும் தலைபில் சானல் 4 தொலைக்காட்சி நேற்று ஞாயிறன்று வீடியோ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

கலம் மக்ரே அவர்களால் தயாரிக்கப்பட்ட, அந்த குறிப்புக்கான வீடியோ ஆதாரத்தை பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கியிருந்ததாக அந்தத் தொலைகாட்சி கூறியிருந்தது.

பெண்  விடுதலைப்புலிகள் என்று நம்பப்படுபவர்களின் உடல்களை நோக்கி இலங்கை இராணுவத்தினர் சிலர் மிகவும் மோசமான செயல்களை செய்வதாகக் கூறி, சில காட்சிகளைக் காண்பித்த சானல் 4 தொலைக்காட்சி, அவை திட்டமிட்ட வகையிலான, கொடூரமான பாலியல் வன்செயல்கள் என்றும் விவரித்திருந்தது.

அந்த வீடியோ காட்சிகள் எப்போது படமாக்கப்பட்டவை என்பது தமக்கு தெளிவாகத் தெரியாவிட்டாலும், இலங்கைப் போரின் கடைசி இரண்டு அல்லது மூன்று வருடங்களில் ஏதோ ஒரு பகுதியில் அவை படமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

ஒரு சிங்கள படை வீரரால் படம் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், சிங்களத்தில் பேசும் வீரர்கள் சிலர் இருப்பதாகவும், அவர்களது உடைகளைப் பார்க்கும்போது அவர்கள், ஏதோ ஒரு சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது. சிரித்துக் கொண்டாடும் அவர்கள், அங்கு கிடந்த பெண்களின் சடலங்களை நோக்கி, அருவருக்கத்தக்க பாலியல் மீறல்களை செய்வதாக அந்தப் படங்கள் காண்பித்தன.

அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்களையும் அவர்கள், சிங்களத்தில் மேற்கொண்டனர்.

சீருடை அணியாவிட்டாலும், அங்கு சடலமாகக் கிடந்த பெண்கள், பெண் போராளிகளாக இருக்க வேண்டும் என்று கூறிய சானல் 4 தொலைக்காட்சி, அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது சரியாகத் தெரியாது என்றும் கூறியுள்ளது.

அந்த வீடியோ ஆதாரங்களை தான் பரிசோதித்ததாகக் கூறிய உலகப்புகழ் பெற்ற தடயவியல் ஆய்வாளரான டாக்டர் ரிச்சர்ட் ஷெப்பேர்ட் அவர்கள், அவை உண்மையான வீடியோக்களே என்றும் சடலங்களில் உடலில் காணப்படுபவை உண்மையான காயங்களே என்றும் தமது ஆய்வில் தெரியவந்ததாகக் கூறினார்.

அந்தச் சடலங்களில் மோதலில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களைக் காணமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பிடித்து வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், அந்த காட்சிகளில் ஒரு பாலியல் வல்லுறவு நடந்ததற்கான சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் அனைவரும் பெண்கள் என்றும், ஆண்கள் அல்ல என்றும், அவர்கள் உடை முழுவதுமாகக் களையப்பட்டு, திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது ஒரு ஒற்றைச் சம்பவமாகத் தெரியவில்லை என்றும் சானல் 4 கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் பதில்

இந்த காட்சிகளுக்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம், இந்த வீடியோ பல்வேறு இடங்களில் வெவ்வேறு நோக்கத்துக்காக திருத்தப்பட்டுள்ளது, மாற்றியமைக்கப்பட்டுள்ளது அல்லது இலங்கை இராணுவத்தின் சீருடையை அணிந்து விடுதலைப்புலிகள் இவ்வாறு நடித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இப்படியான பிரச்சாரங்கள், இலங்கையில் நடக்கும் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

சிறுவர்களை படைக்குச் சேர்த்தல், தற்கொலைத் தாக்குதல்களை நடத்துதல் ஆகியவை உட்பட விடுதலைப்புலிகளும் சந்தேகத்துக்கு இடமில்லாமல், மோசமான போர்க் குற்றங்களை செய்திருக்கிறார்கள் என்றும், ஆனால், தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக அதனை இலங்கை அரசாங்கம் பயன்படுத்த முடியாது என்றும் சானல் 4 கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக விடுதலைப்புலிகளில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இராணுவத்தினர், உயிரோடு கைது செய்ததையும், அவர் உடைகள் களையப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதையும் காட்டும் வீடியோக்களை தாம் வெளியிட்டதாகக் கூறிய சானல் 4 தொலைக்காட்சி, அந்த நிலையிலேயே தற்போதைய வீடியோ காட்சிகளும் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதி நாட்கள் குறித்து பல வீடியோக்கள் ஏற்கனவே வந்திருக்கின்ற போதிலும், இந்த வீடியோ அவை எல்லாவற்றையும்விட மிகவும் மோசமானதாக இருப்பதாக இலங்கைக் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை தயாரித்த, கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.

Check Also

பிரபாகரன் தற்கொலை செய்துதான் இறந்தார்: கருணா பரபரப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *