சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது.
இந்த முதல் கட்டத்தில் சென்னை பூந்தமல்லியிலிருந்து கத்திபாரா வரை இந்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். போரூரிலிருந்து வடபழனியை இணைக்கும் பாதையும் போடப்படும்.
முதல் கட்டத்தில் 20.68 கி.மீ. தொலைவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு என 3,267 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான செலவு முழுவதையும் மாநில அரசு, மாநில அரசு ஏஜென்சிகள், இதில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசு எந்த நிதியுதவியும் அளிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் அனுமதி:
நகரில் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பயணிகளை ஈர்க்க வேண்டும், புறநகர் ரயில் போக்குவரத்து உட்பட அனைத்துப் பொதுப் போக்குவரத்துத் திட்டங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும், உரிய சட்டத்தின் மூலம் மெட்ரோபாலிடன் போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி, நகர்ப்புற போக்குவரத்துத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும், தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து மேற்பார்வை அமைப்பு ஒன்றை உருவாக்கும்.
ஆகிய நிபந்தனைகளுடன் இந்த மோனோ ரயில் திட்டத்திற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் சுமார் 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் 111 கி.மீ. தூரத்திற்கு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என 2011ஆம் ஆண்டின் ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டது.