திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது:
பெண்கள் பாதுகாப்பிற்கு ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?
“மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக காவல்துறை விளங்குகிறது” என்றும் “காவல்துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் சட்டமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிவருகிறார்.
அப்படி நவீனப்படுத்தப்பட்ட காவல்துறையை வைத்துக்கொண்டு நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் ஆட்சியிலேயே ஏன் தடுக்க முடியவில்லை?
டெல்லியில் “நிருபையா” பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் டெல்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. குற்றவாளிகளை கண்டுபிடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குள் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்க காவல்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. மத்திய அரசும் ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் ஜே.எஸ்.வர்மா அவர்கள் தலைமையில் விசாரணை குழு அமைத்து 30 நாட்களுக்குள் அறிக்கையைப் பெற்று பாலியல் பலாத்காரத்தை தடுப்பதற்கு கடுமையான சட்டத்தையும் கொண்டு வந்தது.
அந்த சமயத்தில் பெண்களின் பாதுகாப்பை தானும் நிலைநாட்டப்போகிறேன் என்று ஒரு 13 அம்ச திட்டத்தை 1.1.2013 அன்று அந்த வருடத்தின் முதல் செய்திக்குறிப்ப்பாக வெளியிட்டார் அம்மையார் ஜெயலலிதா. அவற்றில் சில:-
ஆக இப்படி 13 அம்ச திட்டத்தை மட்டும் அவசர அவசரமாக வெளியிட்ட அம்மையார் ஜெயலலிதா இவற்றில் எத்தனை அம்சங்களை இதுவரை நிறைவேற்றியிருக்கிறார்? அதனை அவரால் பட்டியலிடமுடியுமா? ஆட்சிக்கு வந்தபிறகு கடிதம் எழுதுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் ஜெயலலிதா, பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற எத்தனை கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறார்? பரபரப்பான “13 அம்ச திட்டத்தை” வெளியிட்டு ஒரு வருடம் முடிந்த பிறகு கூட, ஜெயலலிதா அரசால் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியவில்லை.
இளம்பெண் சாப்ட் வேர் எஞ்சினியர் கற்பழித்து கொல்லப்பட்டதை தடுக்க முடியவில்லை என்றால் அந்த 13 அம்சத்திட்டத்தை சரிவர தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றுதானே அர்த்தம்? தி.மு.க வின் திட்டங்கள் என்றால் அம்மையாருக்கு வேம்பாக கசக்கும். அவை மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களாக இருந்தால் கூட தி.மு.க கொண்டு வந்தது என்கிற ஒரே காரணத்திற்காக அந்த திட்டங்களையெல்லாம் ரத்து செய்யும் அம்மையார் ஜெயலலிதா, அவரே அறிவித்த 13 அம்ச திட்டத்தைக்கூட கிடப்பில் போட்டது ஏன்? ”தேர்தல் அறிக்கை” , ”சட்டமன்ற 110 விதி அறிக்கை” ஆகியவை போலவே பெண்களுக்கான 13 அம்ச திட்டமும் ”வெற்று அறிவிப்பபாகவே” போய்விட்டதா?
ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்கள் பாதுகாப்பிற்காக எப்படிப்பட்ட சட்டம் கொண்டுவந்தோம் என்பதை நாங்கள் சொல்வதைவிட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்களின் கருத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நீதியரசர் சந்துரு அவர்கள் 25.1.2014 தேதியிட்ட “தி இந்து” ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், “ In order to inquire into complaints of sexual harassment of women at any place by anyone, a special criminal law must be put in place to deal with SHW offences delinking them from employment rules as was done in Tamil Nadu which enacted the Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998 to deal with such type of cases” என்று பதிவு செய்துள்ளார்.
அதாவது பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்கள் சமுதயத்திற்கும் எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு கொண்டு வந்த ’Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998’ போன்ற சிறப்பு கிரிமினல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நீதியரசர் சந்துரு சுட்டிக்காட்டிய சட்டம் கலைஞர் தலைமையிலான அரசு நடைபெற்றபோது 1998ல் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது..
தி.மு.க ஆட்சி காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால் அம்மையார் ஜெயலலிதா சரியான சட்டமும் கொண்டுவரவில்லை. அவரே அறிவித்த 13 அம்ச திட்டத்தையும் நிறைவேற்றவில்லை அதைவிட முக்கியமாக காவல்துறை வழிகாட்டியாகவும் , நவீனமயமாகவும் விளங்குகிறது என்று அம்மையார் ஜெயலலிதா தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். ஆனால் தமிழக காவல்துறை இணையதளத்தில் 1.1.2014 அன்றைய தேதி வரை கூடுதல் டி.ஜி.பி முதல் கான்ஸ்டபிள் வரை 19,685 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலியிடங்கள் இருந்தால் காவல்துறை தான் என்ன செய்ய முடியும்? இளம் சாப்ட் வேர் எஞ்சினியர் கொலை செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்
இனியாவது வாய்ஜாலத்தோடும் , வெறும் பேப்பர் அறிவிப்புகளோடும் நிறுத்திக்கொள்ளாமல் பெண்களின் பாதுகாப்பில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் எத்தனையோ திறமையான பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். சாஃப்ட்வேர் இஞ்சினியர் கொலை வழக்கில் ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை விசாரனை அதிகாரியாக நியமிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அரசின் இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு தடுக்க முடியும். ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் அம்மையார் ஜெயலலிதா பெண்கள் சமுதாயத்திற்கான இந்த பாதுகாப்புகளையாவது உறுதி செய்வாரா?
என கூறியுள்ளார்.