தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.
கட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தன்னை மதிப்பதில்லை என்ற வருத்தத்தினால் அவர் ராஜினாமா செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, ஞானதேசிகனுக்கும், முகுல் வாஸ்னிக்கிற்கும் இடையே புதனன்று டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது கருத்து வேறுபாடு முற்றியதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலிடம் இவர் ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
எந்த ஒரு முக்கிய முடிவுகளிலும் மாநில காங்கிரஸ் தலைவர்களை கலந்தாலோசிப்பதேயில்லை என்றும் இதனால் வருத்தம் கொண்ட ஞானதேசிகன் ராஜினாமா செய்ததாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலர் பதவிக்கு 2 நியமனங்கள் செய்யப்பட்ட போது கூட தமிழ்நாடுக் கட்சித் தலைமையிடம் கலந்தாலோசிக்கவில்லை. மேலும், ஞானதேசிகனைப் பதவியிலிருந்து நீக்குமாறு கட்சித்தலைமையிடம் தமிழக காங்கிரஸார் சிலர் மேற்கொண்ட முயற்சிகளும் இந்த ராஜினாமாவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.