தமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967க்குப் பிறகு 46 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.
2009 தேர்தலில் 72.98 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது.
தற்போது 46 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக தருமபுரியில் 80.99 சதவீதமும், தென் சென்னையில் குறைந்தபட்சமாக 59.86 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தபால் வாக்குகளின் எண்ணிக்கை தெரிந்த பிறகு இன்று சரியான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வாக்குப்பதிவு 82.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள், 42 மையங்களில் மே 16ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள், பூட்டி சீல் வைக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள் ‘ஸ்ட்ராங் ரூம்’ என அழைக்கப்படும் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் உள்ள ஜன்னல்கள் அனைத்தும், திறக்க முடியாத நிலையில் மூடப்பட்டிருக்கும்.
ஒரே ஒரு வழியை மட்டும் கொண்ட இந்த அறையில், இரும்பு கம்பிகள் கொண்டு கதவுகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையை சுற்றி, 24 மணி நேரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினரும், 2ம் மற்றும் 3ம் அடுக்குப் பாதுகாப்பில் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அங்கு தடையில்லா மின்சாரமும் வழங்கப்படும்.
[pullquote]சென்னையை பொறுத்தவரை, வடசென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், தென்சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள், அண்ணா பல்கலைக் கழகத்திலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள், லயோலா கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.[/pullquote]
வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது, தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகளோ அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரிகளோ, மையங்களை பார்வையிட வேண்டும் என்றால், வெளியே பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா மூலம் பதிவு செய்து விட்டு, சம்பந்தப்பட்ட இடத்தில் கையெழுத்து போட்டு விட்டுதான் உள்ளே செல்ல வேண்டும்.
மே 16ம் தேதி காலை 8 மணிக்குதான், வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கபட்டுள்ள சீல் அகற்றப்படும். அன்று காலை சுமார் 9 மணிக்கு முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கும்.