இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக அதிபர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சிறைகளில் 98 தமிழக மீனவர்கள் இருப்பதாக, அந்நாட்டு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று, இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல், இந்தியா புறக்கணித்தது. இதற்கு நாடு முழுவதும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவரும் வேளையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கைக்கு செய்த இந்த உதவிக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழக மீனவர்களை விடுதலை செய்து நன்றிக்கடன் செய்வதாக விமர்சனமும் எழுந்துள்ளது.
மேலும் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறல்களை திணிக்கக்கூடாது, அதற்கு உண்டான நடவடிக்கையே அனைவரும் எதிர்பார்ப்பதாக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு சர்வதேச நெருக்கடி முற்றுகின்ற இந்த நேரத்தில் இந்தியாவின் உதவி கண்டிப்பாக தேவை என்பதற்காகவும் இந்த நடவடிக்கையை ராஜபக்சே எடுத்துள்ளதாகவும் தெரிகிறது