நில அவசரச் சட்டம்: தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியுள்ள நிலையில், அதனை ஆதரித்து வாக்களித்த தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,

விவசாயிகளின் நலனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்வாங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிப்புக்கு மத்திய அரசு பணிந்திருக்கிறது. பிகாரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டோ அல்லது எவ்வளவோ முயற்சித்தும் நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மையைப் பெற முடியாததாலோ மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும், விவசாயிகளின் சம்மதமின்றி அவர்களின் நிலங்களைப் பறிக்கக்கூடாது என்று தொடக்கம் முதலே இந்தச் சட்டத்தை எதிர்த்துவந்த இயக்கமான திமுக சார்பில் இதனை வரவேற்கிறேன்.

பெரும் முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கப் போகின்றன என்றும் அவர்களது நன்மைக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் என்றெல்லாம் மத்திய அரசு சொன்ன பசப்பு வார்த்தைகளை விவசாயிகள் நம்பவில்லை. பாஜக மட்டுமல்ல அவர்களின் நேசத்துக்குரிய அதிமுகவும் இப்போது அம்பலப்பட்டு நிற்கிறது. இறுதியில் மத்திய அரசு இறங்கிவந்தது, ஜனநாயத்தில் தவிர்க்க முடியாத ஆனால் ஆரோக்கியமான அம்சமாகும்.

விவசாயிகளுக்கு விரோதமான இந்தச் சட்டம், மக்களவையில் நிறைவேற ஆதரித்து வாக்களித்த கட்சி அதிமுக என்பதையும் அதன் சந்தர்ப்பவாதத்தையும் தமிழக விவசாயிகள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகாலிதளம் பகிரங்கமாக இச்சட்டத்தை எதிர்த்தது. கடந்த மார்ச் மாதத்தில் மக்களவையில் வாக்கெடுப்பு நடந்தபோது, இன்னொரு கூட்டணிக் கட்சியான சிவசேனை வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தது.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் அம்மையார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று மேல்முறையீடு நிலுவையில் இருந்த நிலையில், அவரது கட்சியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்கள் விரோத, விவசாயிகள் விரோத சட்டத்தை ஆதரித்து வாக்களித்து விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்ததை வரலாற்றில் மறைத்துவிட முடியாது. அக்கட்சியின் சார்பில் மசோதாவை ஆதரித்துப் பேசிய திரு கே என் ராமச்சந்திரன் தமிழகத்தின் நன்மைக்காகவும், தமிழக மக்களின் நன்மைக்காகவும் அல்லும் பகலும் அயராது பாடுபடும் அதிமுக, தமிழகத்தின் நன்மைக்காகவே நில எடுப்பு திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்தது என்றும் தனியார் மருத்துவமனை, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிலம் அளிக்கக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

அதே நேரத்தில் புதிய திருத்தங்கள் மூலம் மிகச் சிறந்த சீர்திருத்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் சொத்தைக் காரணங்களைக்கூறி அரசுக்குப் புகழ்மழையைப் பொழிந்தார். அதிமுகவின் இந்தத் துரோகத்தையும் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையும் விவசாயிகளும் அவர்களது நலனுக்காகப் போராடுவோரும் மறக்க மாட்டார்கள்.

விவசாயிகளின் எதிர்ப்பு கொளுந்துவிட்டு எரிகிறது; எதிர்க்கட்சிகளும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று உறுதியான நிலையிலும், தமது சுயநல நோக்கம் நிறைவேறிவிட்ட சூழலிலும் திடீரென்று அதிமுக பல்டி அடித்தது. ஆதரித்த சட்டத்தையே ஏற்கவில்லை என்று சொன்னது. திடீர் ஞானோதயத்துக்கு அதிமுக முன்வைத்த அனைத்தும் சொத்தைக் காரணங்கள். அதன் நீட்சியாக தான் மரபை மீறி பிரதமர் நரேந்திர மோடி போயஸ் தோட்டம் சென்று முதல்வரைச் சந்தித்ததை அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிவர்.

சுயநலனுக்காக, முரண்பாடான நிலையை எடுப்பது அதிமுகவுக்குப் புதிதல்ல. மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர் விபிசிங் அவர்கள் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்காக, நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அவருக்கு எதிராக வாக்களித்தது அவர்களது சம்மதத்துடன்தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று திமுக ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சட்டத்தை எதிர்த்ததும் அதிமுகதான்.

பொதுத்துறையில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் என்று பேசிக்கொண்டே காப்பீட்டுத்துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை ஆதரித்து வாக்களித்தது என அதிமுகவின் துரோகப் பட்டியல் நீளமானது. இறுதியாக, நான் கேட்க விரும்புவது நரேந்திர மோடி அரசு இந்த விவகாரத்தில் தனது தவறை உணர்ந்திருக்கிறது. மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. தமிழக விவசாயிகளின் நலனைப் புறக்கணித்து, ஆதாயத்துக்காக விவசாய விரோத நிலப் பறிப்புச் சட்டத்தை மக்களவையில் ஆதரித்து வாக்களித்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதா, வேளாண் பெருங்குடி மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். கேட்பாரா? என்று தனதுப் பதிவில் கூறியுள்ளார்.

Check Also

மக்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் 173 தொகுதிகளில் …