மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்: ராகுல் உறுதி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று ராமநாதபுரத்தில் அத்தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் உள்பட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:–

10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வன்முறையும், மத துவேசமும் கிடையாது. இந்திய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே சிறப்பான திட்டங்களை தந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர் தொலைநோக்கு பார்வையுடன் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இந்த மதிய உணவு திட்டத்தின் மூலம் ஏராளமான குழந்தைகள் பள்ளி செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வெளி நாட்டினரும் பின்பற்றும் வகையில் இந்த திட்டம் உள்ளது.

இங்குள்ள மற்றொரு பிரச்சினை மீனவர்கள் மீதான தாக்குதல். இதனை தீர்க்க மும்பையில் சமீபத்தில் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினேன். அப்போது மீனவர்களுக்கென தனி அமைச்சரகம் வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்று காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு தனி அமைச்சரகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்ப ட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படும். மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 15 கோடி மக்களை காங்கிரஸ் மேலே கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்துள்ளது. இதனால் இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இது மிகப் பெரிய சாதனையாகும்.

ஏழை–எளிய மக்களை பாதுகாக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் பசியில்லாத இந்தியாவை உருவாக்கி உள்ளோம். தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பலருக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 5 கோடி பேருக்கு வேலை வழங்கியுள்ளோம்.

காங்கிரஸ் அரசின் மற்றொரு சாதனையாக உள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் மூலம் யாரையும் நாம் கேள்வி கேட்கலாம். ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்த காங்கிரஸ் கொண்டு வந்தது தான் லோக்பால் சட்டம். ஊழலை ஒழிப்பதற்கான முக்கிய ஆயுதம் இது. இந்த சட்டம் கொண்டுவர காங்கிரஸ் தான் முக்கிய காரணம். இந்த சட்டம் உள்பட 5 முக்கிய சட்டங்களை நிறைவேற்ற விடாமல் எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் தடுத்தன. சபையையே நடத்த விடாமல் கூச்சல், குழப்பம் செய்தன. ஊழலை ஒழிப்போம் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் அவர்களது தேர்தல் அறிக்கையில் அதைப்பற்றி எதுவும் கூறவில்லை.

பெண்கள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் நினைத்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும். பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யவில்லை. ஊராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம இடஒதுக்கீடு கொடுத்தது காங்கிரஸ்தான். சட்டமன்ற, பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு கொடுத்துள்ளோம்.

பெண்களின் கோரிக்கையை ஏற்று கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் நேரிடையாக புகார் அளிக்க 200 மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். தற்போதைய முக்கிய பிரச்சினை வேலைவாய்ப்பு. தமிழகத்திலும் இதே பிரச்சினைதான் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் தொழில் வளாகங்கள் ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும். தற்போது ஒவ்வொரு பொருட்களிலும் ‘‘மேட்இன் சைனா’’ ‘‘மேட்இன் ஜப்பான்’’ என இருப்பதை மாற்றி, ‘‘மேட்இன் இந்தியா’’ ‘‘மேட்இன் தமிழ்நாடு’’ என குறிக்கும் வகையில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம்.

காங்கிரஸ் அரசு ஏழைகளின் அரசாக செயல்பட்டுள்ளது. விவசாயிகள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் அரசாக விளங்கியது. அவர்களது ரூ. 72 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்துள்ளது.

பாட்டாளி மக்களின் கஷ்டங்களை போக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும். இந்தியாவில் எல்லோருக்கும் வீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். ஒரு இந்தியர் கூட சொந்த வீடு இல்லை என்ற நிலை மாற்றப்படும். எல்லோருக்கும் ஒரு வீடு தருவோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் தேர்தலில் பணியாற்றுவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர பாடுபடுவோம். மக்கள் விரும்பக்கூடிய நல்ல ஆட்சி தமிழ்நாட்டில் கொண்டுவரப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ஏழைகளுக்காக மதசார்பற்ற அரசு அமைய பாடுபடவேண்டும். காங்கிரஸ் விருப்பு வெறுப்பு இன்றி மதவேறுபாடின்றி அனைவருக்கும் ஒன்றாக பாடுபடும். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே மாதிரியாக நடத்தும். தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் தங்களது திறமையை வெளிஉலகிற்கு நிரூபித்துள்ளனர். மோடி குஜராத்தை பற்றி மட்டும் அடிக்கடி பேசுகிறார். இங்கு வந்து
தமிழ்நாட்டு மக்களை பற்றி அவர் பேசவில்லை.

இப்போது உங்கள் உள்ளூர் வேட்பாளர் பற்றி பேசுகிறேன். இந்த தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். தமிழக மந்திரியாக இருந்துள்ளார். மத்தியில் கேபினட் மந்திரியாக இருந்துள்ளார். 2 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைச்செயலாளராக உள்ளார். இவர் இந்த மாவட்ட மக்களின் முக்கிய பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து பாடுபடக்கூடியவர். இப்பகுதிக்கு மிகப்பெரிய மருத்து வமனை கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்.

தமிழ்நாட்டின் குரலாக, உங்களின் குரலாக, பலத்த குரலாக ஒலிக்க திருநாவுக்கரசருக்கு வாக்களியுங்கள். இந்த வெயிலிலும் இந்த கூட்டத்திற்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. அதிலும் குறிப்பாக ஏராளமான தாய்மார்கள் இங்கு வந்துள்ளீர்கள். வெயிலை பொருட்படுத்தாமல் இங்கு வந்து எனது பேச்சை கேட்டது எனது பணிக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *