விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னவே யானை முகத்தவனே என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
வினை தீர்க்கும் தெய்வமான விநாயகர் பெருமான் அவதார திருநாளே விநாயகர் சதுர்த்தி. இந்த தினத்தன்று, களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருள்களைப் படைத்து, அறுகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, முதன்மை கடவுளான விநாயகப் பொருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவர்.
பிரணவப் பொருளாக திகழ்ந்து வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமான், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென வேண்டுவதாக தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி