தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சரிதா தேவி, அதனை கழுத்தில் அணிந்து கொள்ள மறுத்துவிட்டார்.
மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி, தென் கொரியாவின் ஜினா பார்க்குடன் நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஆக்ரோஷமாக செயல்பட்ட சரிதா தேவி தனது அதிரடி குத்துகளால் ஜினா பார்க்கை திணறடித்தார். முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சரிதா நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடுவர்கள் மூவரும் தென் கொரிய வீராங்கனைக்கு சாதகமாக புள்ளிகளை வழங்கி (39-&37) அவர் வென்றதாக அறிவித்தனர்.
குத்துச் சண்டைப் போட்டியில் சரிதா தேவி சிறப்பாக விளையாடியும், நடுவர்களின் தீர்ப்பினால் அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். நடுவர்களின் பாரபட்சத்தால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த அவர் கண்ணீர் மல்க ‘எனது கடின உழைப்பு வீணாகிவிட்டது. எனக்கு நேர்ந்தது போன்ற அநீதி வேறு யாருக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கதறியபடி வெளியேறினார். நடுவர்களின் செயலால் ஆத்திரமடைந்த அவரது கணவரும் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து இந்திய குழுவினர் மேல்முறையீடு செய்தும், அது நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் சரிதா தேவிக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிந்து கொள்ள மறுத்து, அதனை கண்ணீர் மல்க கைகளில் பெற்றுக் கொண்டார். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது.