ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை சரியாக 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-வது கிரையோஜெனிக் என்ஜினுடன் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.
ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு தொடங்கியது.
மொத்தம் 2,117 கிலோ எடையுள்ள ஜிசாட்-6 செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றுடன் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதில் எரிபொருளின் எடை மட்டும் 1,132 கிலோ கிராம் ஆகும். இந்த ராக்கெட்டின் உயரம் 49 மீட்டர். எடை 416 டன் ஆகும்.
ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிஷங்களில் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டரும், அதிகபட்சம் 35,975 கிலோ மீட்டரும் கொண்ட தாற்காலிக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்படும். அதன் பிறகு செயற்கைக்கோளில் உள்ள திரவ எரிபொருள் மோட்டார் இயக்கப்பட்டு, சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் ஏவப்படும்.
இந்த செயற்கைகோளில் எஸ் பேண்ட் தொலைத் தொடர்புக்கு உதவும் 6 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய ஆன்டெனா உள்ளது. இந்த ஆன்டெனா இதுவரை இஸ்ரோ ஏவியதிலேயே மிகப்பெரியது ஆகும். இதன் மூலம் மிகச்சிறிய கையடக்கக் கருவிகளிலிருந்தும் சிக்னல்களை பெற்று நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பலாம்.
All about GSLV-D6 / GSAT-6 Mission http://t.co/ms4BbMVvbE pic.twitter.com/8PnOcSKpJF
— ISRO (@isro) August 27, 2015
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜிசாட்-6 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் ஒரு வியத்தகு சாதனையை படைத்துள்ளனர் என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Another day & another phenomenal accomplishment by our scientists. Congratulations @isro for the successful launch of GSAT-6.
— Narendra Modi (@narendramodi) August 27, 2015