ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
சீன தேசிய தினத்துக்கு முன்னதாக ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர்.
இது வரை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களிலேயே, செவ்வாய் கிழமை நடக்கும் போாரட்டம்தான் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கில் இரவு நேரம் நெருங்கிய நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் நகரின் மையப்பகுதியிலும், முக்கிய சந்திப்புகளிலும் குவிய ஆரம்பித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னதாகக் கலைந்து போகச் சொன்ன சீனாவின் தலைமை நிர்வாகி சி.வொய். லியுங் அவர்கள் பதவி விலகக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பீஜிங் இதில் பின்வாங்காது என்று அவர் எச்சரித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டங்களை போராட்டக்காரர்கள் “ஜனநாயக சதுக்கங்கள்” என்று வர்ணித்தனர்.
ஹாங்காங்கில் வரும் 2017ம் ஆண்டில் நடக்கவுள்ள அடுத்த தலைமைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பின்னணியைப் பரிசோதிக்க சீனா வைத்திருக்கும் திட்டங்களை அது விலக்கிக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
சீனா இந்த ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமானது என்று கூறியிருப்பதுடன், ஹாங்காங் அரசு இந்த ஆர்ப்பாடங்களை சமாளிக்க தனது முழு ஆதரவைத் தருவதாகக் கூறியிருக்கிறது.